முடிவினை எட்டாது நிறைவடைந்த ரணில் - பசில் - மகிந்த சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களான மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் மேற்கொண்ட விசேட சந்திப்பானது, முடிவினை எட்டாது நிறைவு பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது, நேற்றைய தினம் (07.03.2024) இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நிலுவையிலுள்ள அரசியல் விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக இடம்பெற்றுள்ளது.
இதன்போது, தேசிய தேர்தலுக்கு முன்னதாக கூட்டணி அமைப்பது குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக தீரமானிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கூட்டணியை உருவாக்குதல்
மேலும், தேசிய சொத்துக்களை தனியார் மயப்படு;த்தல், மற்றும் அதிகாரப் பகிர்வு ஆகிய இரண்டு கொள்கை விடயங்களில் இணங்கி, ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய, முன்னதாக தமது ஆட்சியின் போது அரசுடமையாக்கப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் போன்ற நிறுவனங்களை தொடர்ந்தும் அரசுடமையாக முன்னெடுத்துச் செல்வதே பொதுஜன பெரமுன கட்சியின் கொள்கை என்ற விடயம் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் ரணில் விக்ரமசிங்கவின் மறுசீரமைப்புத் திட்டத்தில் இந்த நிறுவனங்களும் உள்ளடங்குவது குறித்து கட்சியின் தலைவர்கள் இருவரும் ரணிலிடம் இருந்து சமரசத்தை எதிர்பார்த்துள்ளனர்.
தொடரும் பேச்சுவார்த்தை
அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அதிகாரப் பகிர்வின் முன்மொழியப்பட்ட வரையறைகள் குறித்தும் அவர்கள் அதிருப்தி வெளியிட்டதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இரண்டு தரப்பினரும் தங்கள் அரசியல் நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும், ஒருவருக்கொருவர் அக்கறையுள்ள விடயங்களில் எவ்வளவு தூரம் பொதுவான நிலைப்பாட்டை எட்டமுடியும் என்பது தொடர்பில் தொடர்ந்து பேசவும் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |