பதவி விலகுவதாக அறிவித்தார் கோட்டாபய! கொழும்பு அரசியலில் ஏற்படும் திருப்புமுனை
எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
சற்று முன்னர் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்படி, ஜூலை 13ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
President Gotabaya Rajapaksa has informed that he will resign from the Presidency on the 13th: Speaker Mahinda Yapa Abeywardena- Hiru #LKA #SriLanka #EconomicCrisisLK #SriLankaCrisis #SriLankaProtests pic.twitter.com/Q75uScryOy
— Sri Lanka Tweet ?? ? (@SriLankaTweet) July 9, 2022
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்திருந்தது. மே மாதம் 9ம் திகதி முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தின் காரணமாக அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியிருந்தார்.
இதனை தொடர்ந்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றிருந்தார். எனினும், நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகள் கிடைக்கவில்லை.
பெரும் திருப்புமுனையாக அமைந்த ஜனாதிபதியின் பதவி விலகள் அறிவிப்பு
இந்நிலையிலேயே, இன்றைய தினம் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன போராட்டகாரர்களினால் முற்றுகையிடப்பட்டிருந்தது.
எனினும், ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. போராட்டம் தீவிரமடைந்திருந்த நிலையில், இன்று மாலை அவசர கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றிருந்தது.
மேலும் ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் ஜனாதிபதி உடன் பதவி விலக வேண்டும் என கோரியிருந்த நிலையில், முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையிலேயே எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
தான் தோல்வியடைந்த ஜனாதிபதி பதவி விலக போவதில்லை என அண்மையில் அறிவித்திருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தற்போது பதவி விலகுவதாக அறிவித்துள்ளமை பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.