வரலாறு திருத்தி எழுதப்படுகின்றது! கோட்டாபய பதவி விலகியவுடன் அடுத்தது என்ன..
நாட்டில் ஏற்பட்டுள்ள மிகக் கொடூரமான பொருளாதார நெருக்கடி நிலை மக்களை அதியுச்ச மன அழுத்தத்திற்கும், அதிருப்திக்கும் உள்ளாக்கியுள்ளது.
இதன் விளைவு இன்று நாடு முழுவதும் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றுதிரண்டுள்ள மக்கள் எண்ணிக்கையில் காண முடியும்.
கடந்த மார்ச் மாத இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் இன்று வரையில் பல்வேறு அரசியல் மாற்றங்களை கொண்டு வந்துள்ளன. குறிப்பாக இலங்கையின் வரலாற்றில் ஜனாதிபதி ஒருவர் மக்கள் போராட்டத்தில் பதவி விலக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.
இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 69 இலட்சம் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக பதவி ஏற்றிருந்தாலும், அந்த 69 இலட்சம் மக்களும் இன்று கோட்டாபயவுக்கு எதிராக திரண்டு நிற்கின்றனர்.
69, மே 9, ஜீன் 9, ஜூலை 9 என்று ஒன்பதாம் இலக்கத்தில் இலங்கையின் அரசியல் வரலாறு திருத்தியமைக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.
கோட்டாபயவின் முடிவை மாற்றிய பொதுமக்கள்
இந்தநிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டிய இறுதி தருணத்தை எட்டியுள்ளார். அப்படி ஒரு சூழல் பொதுமக்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவிக்காலம் முடிவதற்கு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இன்னும் மீதம் உள்ளன. பதவிக்காலம் முடியும் வரை தான் பதவி விலகப் போவதில்லை என இதற்கு முன்னர் கோட்டாபய அறிவித்திருந்தாலும் இன்றைய நிலைமை தலைகீழாக அந்த எண்ணத்தை மாற்றியமைத்துள்ளது.
அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கும் முடிவுக்கு தான் மதிப்பளிப்பதாக கோட்டாபய அறிவித்துள்ள நிலையில், அவரை பதவியில் இருந்து விலக கோருவதாகவே அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் முடிவாகவும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பதவிக்காலம் முடிவதற்குள் அரச தலைவர் பதவி விலகினால் அரசியலமைப்பின் 40 வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஒரு சிறப்பு நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.
இந்த நடைமுறையின் படி நாடாளுமன்றம் ஓர் ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும். ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்தால், அவர் ராஜினாமா செய்த மூன்று நாட்களுக்குள் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும்.
நாடாளுமன்றம் கூட்டப்பட்ட பின் ஜனாதிபதியின் ராஜினாமா குறித்து நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
அத்துடன் வெற்றிடமாகவுள்ள ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்களை பெறுவதற்கான திகதியை நிர்ணயிக்க வேண்டும்.
ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டால், அந்த நபர் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக செயலாளர் நாயகத்தால் அறிவிக்கப்படுவார்.
ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பரிந்துரைக்கப்பட்டால், ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அறுதிப் பெரும்பான்மை வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் (எண். 2 இன் 1981) நாடாளுமன்றத்தால் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது குறிப்பிடுகிறது.
புதிய ஜனாதிபதி பதவியேற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், தற்போதைய பிரதமர் பதில் ஜனாதிபதியாக செயற்படுவார்.
இந்த காலகட்டத்தில், அமைச்சரவையின் அமைச்சர்களில் ஒருவர் பிரதமரின் அலுவலகத்தில் செயல்பட நியமிக்கப்படுவார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மீதமுள்ள காலத்திற்கு பதவியில் இருக்க முடியும்.
அதாவது, கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்யும் பட்சத்தில், புதிய நாடாளுமன்றம் தெரிவு செய்யும் வரை ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்திற்கு ரணில் விக்ரமசிங்க தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்பார்.
அடுத்த ஜனாதிபதி யார்?
இவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்று மாலை அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் குறித்த கூட்டத்தின் போது சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவை மிகக் குறுகிய காலத்திற்கு ஜனாதிபதியாக நியமிப்பதற்கு அனைத்து கட்சிகளின் தலைவர்களிடத்தில் இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சர்வ கட்சி அரசாங்கம் ஒன்றை அமைத்ததன் பின்னர் தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
இப்படியான ஒரு சூழ்நிலையில் இலங்கை அரசியலில் அடுத்தடுத்த மாற்றங்கள் என்ன நடைபெறும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக பொதுமக்கள் உருவெடுத்துள்ளனர்.