அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி பெற்றுக்கொடுக்கும் வேலைதிட்டத்தின்போது தேவையுடைய எவரையும் தவறவிட வேண்டாமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, 28 இலட்சத்து 50ஆயிரம் குடும்பங்களுக்கு (2,850,000) அரிசி பெற்றுக்கொடுப்பதற்காக ஆக கூடியது 20 பில்லியன் ரூபாவுக்காயினும் போதுமானளவு நெல்லை கொள்வனவு செய்யுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
நெல் கொள்வனவு செய்வது தொடர்பில் இன்று பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு
கொள்வனவு செய்யப்படும் நெல்லை அரிசியாக்கி, வெளிப்படைத் தன்மையுடன் கூடிய பொறிமுறை ஒன்றினூடாக அதனை குறைந்த வருமானம் பெறுவோருக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் உணவு பாதுகாப்பு வேலைதிட்டத்தின் கீழ் 28 இலட்சத்து 50ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசியைப் பெற்றுக்கொடுப்பதற்காக 20 பில்லியன் ரூபா பெறுமதியான நெல் கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,உத்தரவாத விலையை வழங்குவதன் மூலம் நெல்லின் விலையை பாதுகாக்கவும் எதிர்பார்கின்றோம். இதில் முதல் கட்டம் நெல் கையிருப்புகளை கொள்வனவு செய்வதாகும். இப்பணி மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் அரிசியை விற்பதற்கு நடவடிக்கை எடுக்கமாட்டாது. வறுமையிலுள்ள குடும்பங்களுக்கு அரிசியை இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த வேலைதிட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக பல அமைச்சுக்களுடன் இணைந்து பணியாற்றுவோம். எனினும், இதற்கென முழு நேரமும் செயற்படுவதற்காக குழு ஒன்று அவசியம். அதற்காக பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் குழுவை விடுவிப்பதற்கு பாதுகாப்பு தரப்பினருடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
நெல் கொள்வனவு
25 மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் தகைமை உடையவர்களுக்கு அரிசியை பகிர்ந்தளிக்கும் வகையில் முறையான பொறிமுறையொன்று தயாரிக்கப்பட வேண்டும். நெல் கொள்வனவு தொடர்பில், பாரிய அளவில் முன்னெடுக்கப்பட்டு வரும் நெல் ஆலை உரிமையாளர்களின் தேவையற்ற அழுத்தங்களுக்கு இடம் அளிக்க முடியாது.

மேலும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கென வழங்கப்படும் இந்த மானியத்திற்கு ‘நிவாரண அரிசி’ (‘சஹன சஹல்’) என்று பெயரிடுவதன் மூலம் அவை மீண்டும் விற்பனை செய்யப்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளைப் பெறுதல் மற்றும் மாவட்டச் செயலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துதல் என்பன முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வேலை திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு மிக திருத்தமாக தரவுகளைப் பெற்றுக்கொள்வது அவசியம். அதற்கமைய, கிராம மட்டத்தில் செயற்பட அரச அதிகாரிகள் முன்வராவிட்டால் ஒப்பந்த அடிப்படையில் குழுவொன்றை நியமித்தாயினும் தரவுகள் சேகரிக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.
ஓய்வு பெற்ற அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பை இதற்காக பெற்றுக்கொள்ள முடியும். குறிப்பிட்ட கால வரையறைக்குள் இந்த வேலைதிட்டத்தை முடிவு செய்வதற்கு திட்டமிட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri