ஜனாதிபதி ரணிலுடன் தமிழரசுக் கட்சியின் சசிகலா அணியினர் விசேட சந்திப்பு!
புதிய இணைப்பு
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சசிகலா ரவிராஜ் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் சிலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
அகிலன் முத்துக்குமாரசாமி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான மயூரன், சுதர்சன், மாவை சேனாதிராஜா கலையமுதன், குணாளன் ஆகியோரே இக் கலந்துரையாடலில் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்திப்பில் பிரதேச அபிவிருத்தி தொடர்பாக விரிவான பேச்சில் ஈடுபட்டதாகவும் விசேடமாக சாவகச்சேரியை தனியான பிரதேச செயலக பிரிவாக பிரிப்பது தொடர்பான கோரிக்கை மனுவை சமர்ப்பித்திருந்ததாகவும் சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக சுமந்திரன் அணியினர் அறிவித்த நிலையில் அக்கட்சியின் குழுவினர் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - ராகேஸ்
முதலாம் இணைப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணத்திற்கு பிரசாரத்திற்குச் சென்றுள்ள ஜனாதிபதி வேட்பாளர், ரணில் விக்ரமசிங்க, காங்கேசன்துறையில் உள்ள மாவை சேனாதிராஜாவின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்தார்.
தீர்க்கப்படாத இனப்பிரச்சினை
இதன்போது, நீண்டகாலமாக தீர்க்கப்படாத இனப்பிரச்சினைக்கு சமஸ்டி அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பொருளாதாரத்தின் ஊடாக வளப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
தேர்தலின் பின்னர் இந்தப் பணிகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக ரணில் விக்ரமசிங்க அவர் மேலும் குறிப்பிட்டார்.
பொருளாதாரத்தில் சிறந்த அனுபவம் உள்ளதால் ரணில் விக்ரமசிங்க இதனை செய்துமுடிப்பார் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்தலின் பின்னர் பாரிய கடமைகள் இருப்பதாகவும் சமஸ்டி அடிப்படையில் தீர்வு கண்டு, அந்த நாட்டின் தலைவராக ரணில் விக்ரமசிங்க இருக்க வேண்டும் என்று கோரியதாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |