ரணிலுக்கு ஆதரவாக களமிறங்கும் மகிந்தவின் விசுவாசி : புறக்கணிக்கும் பிரபலங்கள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தீவிர ஆதரவாளர்கள், சமகால ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க மீது தமது அதீத அன்பை வெளிப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய மகிந்தவை புறந்தள்ளிவிட்டு, ரணிலை அடுத்த ஜனாதிபதியாக கொண்டு வரும் முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க எதிர்வரும் 21ஆம் திகதி கடவத்தையில் நடத்தும் பேரணியை புறக்கணிக்க கம்பஹா பொதுஜன பெரமுன கட்சியின் பிரபலங்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரணிலுக்கு ஆதரவாக கூட்டம்
குறித்த கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என இராஜாங்க அமைச்சர்களான இந்திக்க அனுருத்த மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோர் ஏற்கனவே பிரசன்ன ரணதுங்கவிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக கம்பஹா பொதுஜன பெரமுன தொகுதி அமைப்பாளர்களும் அமைச்சருக்கு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் இது தொடர்பில் பியகம பொதுஜன பெரமுன அமைப்பாளரிடம் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பேசியுள்ள நிலையில் அவரும் அந்த அழைப்பை நிராகரித்துள்ளார்.
காரசாரமான பேச்சுவார்த்தை
அப்போது இருவருக்கும் இடையே காரசாரமான பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. பியகம அமைப்பாளர் காரசாரமான உரையாடலைப் பதிவு செய்து கட்சித் தலைவர்களிடம் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், கம்பஹாவில் பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த 19 முன்னாள் உள்ளூராட்சி பிரதிநிதிகள் உள்ள நிலையில், அவர்களில் 15 பேர் இந்த கூட்டத்தை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர்.