ஜனாதிபதிப் பதவிக்கு போட்டி: கூட்டமைப்பினர் யாருக்கு ஆதரவு..!: சுமந்திரன்
"புதிய ஜனாதிபதியாக யாரைத் தெரிவு செய்வது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் முடிவு எடுக்கவில்லை எனவும், எதிர்வரும் 19ஆம் திகதி கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூடி இது தொடர்பில் முடிவு எடுக்கும்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடத்தப்படவுள்ளது.
மும்முனைப் போட்டி

ஜனாதிபதிப் பதவிக்கு மும்முனைப் போட்டி நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ, டலஸ் அழகப்பெரும ஆகிய மூவரும் போட்டியிடத் தயாராகியுள்ளனர்.
இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
"நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 19ஆம் திகதிதான் வேட்புமனுத் தாக்கல் இடம்பெறவுள்ளது. அன்றுதான் புதிய ஜனாதிபதித் தெரிவுக்காக யார் யார் போட்டியிடுகின்றார்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு

எனவே, 19ஆம் திகதி வேட்புமனுத் தாக்கலின் பின்னர் அன்றைய தினமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூடி எந்த வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பில் முடிவு எடுப்போம்.
அதுவரைக்கும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடனும்
நாடாளுமன்றத்திலுள்ள பிரதான கட்சிகளுடனும் பேச்சுக்கள் தொடரும்" என்றார்.