ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகள் நுரைச்சோலை அனல் மின் நிலையத்துக்கு விஜயம்
நிலக்கரி இறக்குமதியில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரிகள், நுரைச்சோலை லக் விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு ஆய்வுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 2009 முதல் இன்றுவரை நிலக்கரி இறக்குமதியில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளை விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் அதன் செயலாளராக டி.வி. பந்துலசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
நிலக்கரி மின் உற்பத்தி
இலங்கையில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி செயன்முறை தொடங்கியதிலிருந்து கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில், அரசாங்கத்திற்குச் சொந்தமான வரையறுக்கப்பட்ட நிலக்கரி நிறுவனம் அல்லது அதன் இணை நிறுவனங்களால் இலங்கைக்குள் நிலக்கரி இறக்குமதி மற்றும் மின் உற்பத்தியில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது சட்டவிரோத செயல்கள் நிகழ்ந்துள்ளனவா என்பதை விசாரணை செய்யும் நோக்கில் குறித்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த ஆணைக்குழுவின் செயலாளர் உள்ளிட்ட ஏனைய அதிகாரிகள் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்துக்கான கள ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளனர்.
கள ஆய்வின் போது, நிலக்கரியை இறக்குவது முதல் அதிலிருந்து மின்சாரம் தயாரிப்பது வரையிலான முழு செயல்முறையும் ஆணைக்குழு அதிகாரிகளின் அவதானிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், நிலக்கரியை இறக்குதல், சேமித்தல், சமவாய்ப்பு மாதிரி எடுத்தல், மாதிரி சோதனை மற்றும் பிரதான கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் ஆகிய செயற்பாடுகளை விசாரணை அதிகாரிகள் கூர்ந்து அவதானித்துள்ளனர்.