நீதிமன்றத்தில் முன்னிலையான யோஷித ராஜபக்ச - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
புதிய இணைப்பு
யோஷித ராஜபக்ச தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான விசாரணைகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிறைவு செய்துள்ளதுடன், அதற்கான கட்டளையை ஜூலை மாதம் 3 ஆம் திகதி வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், சதித்திட்டம் என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என தீர்ப்பளிக்குமாறு கோரி யோஷித ராஜபக்சவினால் மறுஆய்வு மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரரான யோஷித ராஜபக்ச சார்பில் சட்டத்தரணி ஹஃபீல் ஃபாரிஸ் பல விடயங்களை முன்வைத்துள்ளார்.
இதன்போது சட்டமா அதிபர் சார்பில் பிரதி மன்றாடியார் நாயகம் ஜனக பண்டார விடயங்களை முன்வைத்துள்ளார்.
இதனையடுத்து விசாரணைகளை நிறைவு செய்த நீதியரசர்களான அமல் ரணராஜா மற்றும் சுமுது பிரேமச்சந்திர ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த முடிவை அறிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வரான யோஷித ராஜபக்ச இன்றைய தினம் 16ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், சதித்திட்டம் என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என தீர்ப்பளிக்குமாறு கோரி யோஷித ராஜபக்சவினால் மறுஆய்வு மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்றத்திற்கு வருகை
இந்த மனு இன்றைய தினம் (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த நிலையிலேயே அவர் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

அமல் ரணராஜா மற்றும் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர ஆகிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
முன்னதாக, இந்த மனு பரிசீலிக்கப்பட்டபோது யோஷித ராஜபக்சவுக்காக முன்னிலையான சட்டத்தரணி ஹஃபீல் ஃபாரிஸ், இந்த வழக்கில் தனது கட்சிக்காரருடன் டெய்சி ஃபாரஸ்ட் என்ற பெண்ணும் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டிருந்தாலும், சட்டமா அதிபர் பின்னர் டெய்சி ஃபாரஸ்ட்டை விடுவித்துள்ளதாகவும், எனவே தனது கட்சிக்காரருக்கு எதிராக மட்டும் 'சதிசெய்தல்' என்ற குற்றச்சாட்டை நிலைநிறுத்துவது சட்டத்திற்கு எதிரானது என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இருப்பினும், சட்டமா அதிபருக்காக முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்து, பிரதிவாதிகளில் ஒருவருக்கு எதிராக கூட 'சதி செய்தல்' என்ற குற்றச்சாட்டை நிலைநிறுத்த முடியும் என்று வலியுறுத்தினார்.
அதன்படி, இந்த விடயம் குறித்து இன்று முழுமையான விசாரணை நடத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலதிக தகவல் - ஆனந்தி