நீடித்த எரிசக்தி நெருக்கடிக்குத் தயாராகுங்கள்: ஐரோப்பிய ஒன்றியம் அவசர எச்சரிக்கை
ஈரான் போர் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் நீண்ட காலத்திற்கு நீடிக்கக்கூடும் என்பதால், அதற்குத் தயாராக இருக்குமாறு ஐரோப்பிய நாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் (EU) எச்சரித்துள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தொடங்கியதிலிருந்து, ஐரோப்பாவில் எரிவாயு விலைகள் 70 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளன.
இந்தச் சூழலில், இன்று(31.3.2026)நடைபெறவுள்ள அவசரக் கூட்டத்திற்கு முன்னதாக, ஐரோப்பிய ஒன்றிய எரிசக்தி ஆணையர் டான் ஜார்ஜென்சன் அமைச்சர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "எரிசக்தி விநியோகத் தடையை எதிர்கொள்ள நாடுகள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
தீவிரமடையும் பதற்றத்தினால் மூடப்பட்டுள்ள வான்பரப்புகள்! நூற்றுக்கணக்கான விமானங்கள் தொடர்ச்சியாக இரத்து
எரிவாயு விநியோகம்
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் ஐரோப்பாவிற்கான மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் நேரடியாகப் பாதிக்கப்படவில்லை என்றாலும், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களான 'ஜெட் எரிபொருள்' மற்றும் டீசல் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என ப்ரஸ்ஸல்ஸ் கவலை தெரிவித்துள்ளது.

ஐரோப்பா தனது விமான எரிபொருள் தேவையில் சுமார் 15 சதவீதத்தை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறது.
ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதற்கு முன்பு அங்கிருந்து புறப்பட்ட கடைசி எரிபொருள் கப்பல்கள் ஏப்ரல் 10-ஆம் திகதியளவில் ஐரோப்பாவை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எரிபொருள் விலைகள்
அதன் பிறகு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதால், விமான எரிபொருள் விலைகள் கடுமையாக உயரக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த நெருக்கடியைச் சமாளிக்க, ஐரோப்பிய நாடுகள் தங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் அவசரமற்ற பராமரிப்புப் பணிகளைத் தள்ளிவைக்குமாறும், உற்பத்தியைக் குறைக்க வேண்டாமென்றும் ஜார்ஜென்சன் பரிந்துரைத்துள்ளார்.

ஐரோப்பாவிடம் சுமார் மூன்று மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு இருந்தாலும், சில குறிப்பிட்ட பகுதிகளில் தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்ற இறக்கங்கள் தவிர்க்க முடியாதவை என 'ஆர்கஸ் மீடியா' தெரிவித்துள்ளது.
இதற்கு மாற்றாக அமெரிக்கா போன்ற நாடுகளிடமிருந்து எரிபொருளைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள ஐரோப்பிய எரிசக்தி அமைச்சர்களின் கூட்டத்தில் இது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
YOU MAY LIKE THIS VIDEO
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri