பலஸ்தீன மக்களுக்கான ஆதரவு கரம் நீட்டும் இலங்கை
கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளிலுள்ள இயற்கை வளங்கள் மீது பலஸ்தீன மக்களுக்கு இருக்கும் நிரந்தர இறையாண்மையை உறுதிப்படுத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு ஆதரவாக இலங்கையும் வாக்களித்துள்ளது.
நவம்பர் 11ஆம் திகதி நடைபெற்ற ஐ.நா பொதுச் சபையின் இரண்டாவது குழுக் கூட்டத்தில், 150 நாடுகளுடன் இணைந்து இலங்கையும் இத்தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளது.
இத்தீர்மானத்திற்கு மொத்தமாக 151 நாடுகள் ஆதரவாக வாக்களித்ததுடன், 7 நாடுகள் எதிராக வாக்களித்தன; 11 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
எதிரான வாக்குகள்
அமெரிக்கா, இஸ்ரேல், கொலம்பியா, மைக்ரோனேசியா, நவுரு, பலாவ் மற்றும் பராகுவே ஆகிய ஏழு நாடுகளே இத்தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளன.

அதேவேளை, இந்தியா, சீனா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட பல முக்கிய நாடுகளுடன் இணைந்து இலங்கை ஆதரவாக வாக்களித்துள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள நிலம் மற்றும் நீர் உள்ளிட்ட இயற்கை வளங்களைச் சுரண்டுவதையும் சேதப்படுத்துவதையும் இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தும் இத்தீர்மானம், இழப்புகளுக்கு நட்டஈடு கோரும் பலஸ்தீன மக்களின் உரிமையையும் அங்கீகரிக்கிறது.
இத்தீர்மானம் சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தாத போதிலும், பலஸ்தீன உரிமைகள் மற்றும் இரு-அரசுத் தீர்வுக்கான இலங்கையின் நீண்டகால ஆதரவையும், சர்வதேச சமூகத்தின் நிலைப்பாட்டையும் இது வலுவாகப் பிரதிபலிக்கிறது.