வடமராட்சியில் மீண்டும் மலேரியா பரவும் அபாயம் - நாடு திரும்புவோரால் ஆபத்து என்று எச்சரிக்கை
இலங்கையில் மலேரியா தொற்று நோய் பாதிப்பு முழுமையான கட்டுப்பாட்டில் இருந்து வருகின்ற போதிலும், வடமராட்சி கரையோரப் பகுதிகளில் மலேரியா தொற்றை ஏற்படுத்தும் நுளம்புகள் ஏராளமாகக் காணப்படுவதால், இந்தியா மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்குச் சென்று திரும்புபவர்களினால் வடமராட்சி பிராந்தியத்தில் எந்த நேரத்திலும் மீளவும் மலேரியா தொற்று பரம்பலடையும் அபாய நிலை காணப்படுகின்றது என்று பருத்தித்துறை பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் வீ.துவாரகன் எச்சரித்துள்ளார்.
வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் நேற்று (12.11.2026) முற்பகல் 11.30 மணிக்கு உதவி பிரதேச செயலாளர் ப.தயானந்தன் தலைமையில் நடைபெற்ற டெங்கு மற்றும் சுற்றாடல் குழுக் கூட்டத்தின்போதே அவர் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டினார்.
இந்தக் கூட்டத்தில் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பிறேமானந்த, மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி சத்தியரூபன் சூரிகா, பருத்தித்துறை உப நகரபிதா தேவசிகாமணி தேவராஜேந்திரன், முப்படை அதிகாரிகள், பொலிஸார், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மலேரியா தொற்று நிலைமைகள் குறித்துத் தெளிவுபடுத்திய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் வீ.துவாரகன் பின்வரும் முக்கிய தகவல்களை முன்வைத்தார்.
கிணறுகளில் மலேரியா நுளம்புகள்
வடமராட்சி பிரதேசத்தில் தற்போது மலேரியா நோயாளர்கள் எவரும் இல்லை. எனினும், குறிப்பாக வல்வெட்டித்துறை முதல் பருத்தித்துறை வரையான கரையோரப் பகுதிகளிலுள்ள கிணறுகளில் மலேரியா தொற்றை ஏற்படுத்தும் நுளம்புகள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளன. வெளிநாடு சென்று மலேரியா தொற்றுடன் திரும்பும் ஒருவரை இந்நுளம்புகள் கடித்தால், அவை மூலம் பிரதேசம் முழுவதும் நோய் விரைவாகப் பரவும் அபாயம் உள்ளது.
சட்டவிரோத பயணங்கள் மற்றும் ஆபிரிக்க நாடுகளின் ஊடான வருகை
சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குச் செல்லும் நோக்கில் ஆபிரிக்க நாடுகள் ஊடாகப் பயணம் மேற்கொண்டு, முயற்சி கைகூடாதவிடத்து நாடு திரும்புபவர்களினால் பாரிய அபாயம் நிலவுகின்றது. கடந்த 2024ஆம் ஆண்டிலும் இவ்வாறு வெளிநாடு சென்று திரும்பிய ஒருவர் மலேரியா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தார்.

இந்தியப் பயணங்களின் அதிகரிப்பு
தற்போது காங்கேசன்துறை மற்றும் பலாலி ஊடாக இந்தியாவுக்கான கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. வர்த்தகர்கள், சுற்றுலாப் பயணிகள் மட்டுமன்றி, வீட்டு விசேட நிகழ்வுகளுக்காக ஆடைகள் உள்ளிட்ட பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகப் பொதுமக்களும் பெருமளவில் இந்தியாவுக்குச் சென்று திரும்புகின்றனர்.
பொதுமக்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்
மலேரியா தொற்று பரவலைத் தடுப்பதற்காகப் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கட்டாயம் பின்பற்றுமாறு சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.
முற்கூட்டிய தடுப்பு மருந்து மற்றும் இரத்தப் பரிசோதனை
இந்தியா உள்ளிட்ட மலேரியா அபாயம் உள்ள நாடுகளுக்குப் பயணிப்பவர்கள் முற்கூட்டியே மலேரியா தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன், இந்தியா சென்று திரும்பியவர்கள் தாமாக முன்வந்து ஒரு கிழமைக்குள் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அல்லது அருகிலுள்ள வைத்தியசாலைகளில் மலேரியா இரத்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

தாயகம் திரும்பும் அகதிகளுக்கான நடைமுறை
இந்தியாவில் அகதிகளாக இருந்து தாயகம் திரும்பும் மக்களைக் கிராம உத்தியோகத்தர்கள் தமது பிரிவில் பதிவு செய்யும்போது, அவர்கள் மலேரியா உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டமையை உறுதிசெய்யும் படிவங்களைச் சமர்ப்பித்தால் மட்டுமே பதிவுக்கு உட்படுத்த வேண்டும்.
கிணறுகளில் மீன் குஞ்சுகளை விடுதல்
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு அலுவலகத்தில் மலேரியா நுளம்புக் குடம்பிகளை அழிக்கும் மீன் குஞ்சுகள் தாராளமாக உள்ளன. பொதுமக்கள் தமது கிணறுகளில் இம்மீன் குஞ்சுகளை விடுவதற்கு முன்வர வேண்டும் எனவும், கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக அவற்றைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.