கல்வித்துறைக்கு 749 பில்லியன்! சஜித்தின் குற்றச்சாட்டுக்கு புள்ளிவிபரங்களுடன் பதிலளித்த ஹரிணி
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ், கல்வித் துறைக்காக 749 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று(13) அறிவித்துள்ளார்.
இதில், மூலதனச் செலவினங்களுக்காக இதுவரை இல்லாத அளவாக 104 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிதி ஒதுக்கீடு
வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றிய அவர்,
இந்த நிதி ஒதுக்கீடானது அரசாங்கத்தின் மொத்த செலவினத்தில் 12.12 சதவீதமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளுக்கு ஒரு ஸ்மார்ட் பலகையைக்கூட அரசாங்கம் வழங்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த ஹரிணி அமரசூரிய, நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு ஏற்கனவே 4,570 ஸ்மார்ட் பலகைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இடைநிலைப் பாடசாலைகளுக்கு இணைய வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டின் டிசம்பர் மாதத்திற்குள் 6,000 இணைய இணைப்புகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.