மின் தடை குறித்து நாளை வெளியாகவுள்ள முக்கிய தகவல்
புதிய இணைப்பு
நாடு முழுவதும் இன்று (09) ஏற்பட்ட மின்சார தடை தொடர்பான விரிவான தகவல்கள் நாளை (10) வெளியிடப்படும் என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
நாடு முழுவதும் அனைத்துப் பகுதிகளுக்கும் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், அனைத்து மின் இணைப்பு துணை மின்நிலையங்களுக்கும் மின்சாரம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பல இடங்களில் இரண்டாம் நிலை மின் இணைப்புக்களில் மின்சார விநியோகத்தில் சிறிய இடையூறுகள் இருப்பதாகவும், இந்த சேவைகளை விரைவில் மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
விசாரணை நடவடிக்கை
பாணந்துறை துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட ஒரு கோளாறு காரணமாக இன்று காலை 11.15 மணியளவில் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மின்சார அமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மையே மின் தடைக்குக் காரணம் என்று மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
இருப்பினும், மின்சார சபை அமைப்பை மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்த போதிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், பணிகள் தடைபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட பல பகுதிகளுக்கு பிற்பகல் 2 மணியளவில் மின்சாரம் வழங்கப்பட்டதாகவும், மாலை 5 மணியளவில் மின்சாரம் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளுக்கும் முழுமையாக வழங்கப்பட்டதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதேவேளை, பாணந்துறை மின் இணைப்பு துணை மின்நிலையத்தில் குரங்கு ஒன்று குதித்ததால் ஏற்பட்ட விபத்துதான் இந்த மின் தடைக்குக் காரணம் என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி கூறுகிறார். இருப்பினும், இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
You My Like This Video