பொலிஸ் மா அதிபர் பதவியில் தொடரும் சிக்கல்
நாட்டில் குற்றச்செயல்களுக்கு மத்தியில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரட்னவுக்கான சேவை நீடிப்பு அண்மையில் அரசியலமைப்பு சபையினால் நிராகரிக்கப்பட்டுள்ளமை பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியலமைப்பு சபையினால் பதவி நீடிப்பு நிராகரிப்பு விடயம், பொலிஸ் நிர்வாகத்திற்குள் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபரின் சேவை நீடிப்பை அரசியலமைப்பு பேரவை நிராகரித்ததையடுத்து, பொலிஸ் மா அதிபரின் கையொப்பங்கள் செல்லுபடியாகுமா? என்பது தொடர்பில் பாதுகாப்பு துறைக்குள் தொடர்ந்தும் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதவி நீடிப்பு நிராகரிப்பு
சி.டி. விக்ரமரத்னவின் முன்னைய மூன்று மாத கால நீடிப்பு அக்டோபர் 09 அன்று முடிவடைந்ததை அடுத்து, அக்டோபர் 13 அன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விக்ரமரத்னவிற்கு மூன்று வாரங்கள் நீடிப்பு நீடிப்பு வழங்கப்பட்டது.
ஜனாதிபதி விக்ரமசிங்க, பாதுகாப்பு அமைச்சராகவும், பொது பாதுகாப்பு அமைச்சராகவும் இதனை மேற்கொண்டார்.
எனினும் ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று வார கால சேவை நீடிப்பை அரசியலமைப்பு சபை நிராகரித்தது.
இந்தநிலையில் சீனாவின் பீய்ஜிங்கிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, அரசியலமைப்பு சபையின் தீர்மானத்தை மாற்றியமைத்ததுடன், பொலிஸ் மா அதிபரை மீண்டும் நியமிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அங்கிருந்து உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து சில நிர்வாக சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும், சில மூத்த
அதிகாரிகள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தி, பொலிஸ் மா அதிபர் எடுத்த
முடிவுகள் குறித்து விளக்கம் கேட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




