இலங்கைக்கு வழங்கும் நிவாரணங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் வெளியிட்டுள்ள தகவல்
இலங்கைக்கு எதிர்காலத்தில் வழங்கும் நிவாரணங்கள் சம்பந்தமாக சாதகமான நடவடிக்கை எடுப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் நீதியமைச்சர் அலி சப்றிக்கு அறிவித்துள்ளனர்.
ஐரோப்பிய பிரதிநிதிகள் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து திருப்தியடைந்துள்ளதாக நீதியமைச்சு கூறியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கும் ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை தொடர்ந்தும் வழங்க முடியுமா என்பது தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள், இன்று நீதியமைச்சர் அலி சப்றியை அவரது அமைச்சில் சந்தித்தனர்.
அந்த வரிச்சலுகையை மீண்டும் வழங்குவது தொடர்பாக தீர்மானிப்பதற்காக இலங்கையின் முன்னேற்றங்கள் குறித்து மீளாய்வு செய்வது இந்த சந்திப்பின் பிரதான நோக்கமாகும்.
ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள், ஐரோப்பியஒன்றியம் இலங்கை தொடர்பில் கொண்டுள்ள எண்ணத்தை முதலில் தெரியப்படுத்தினர்.
அத்துடன் இலங்கையின் நீதித்துறையில் தற்போதைய முன்னேற்றங்கள் பற்றி நீதியமைச்சரிடம் விடயங்களை கேட்டறிந்தனர் எனவும் நீதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அப்போது, நீதியமைச்சர், நீதித்துறையில் மேற்கொள்ளப்படும் சட்ட மறுசீரமைப்பு, நீதித்துறை டிஜிட்டல் மயப்படுத்தல், வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேன்படுத்துதல், நீதிமன்றங்களை முன்னேற்றுதல், இதற்கு இணையாக நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், அரசியலமைப்புத் திருத்தம் ஆகிய விடயங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து திருப்தியடைந்துள்ளதாகவும் சகல நிவாரணங்கள் தொடர்பாக சாதகமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்ததாக நீதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த சந்திப்பில் நீதியமைச்சின் செயலாளர் சட்டத்தரணி பிரியந்த மாயாதுன்னே, நீதியமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் சட்டத்தரணி ஜனக ரணதுங்க உள்ளிட்டோர் கலந்துக்கொண்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்....
GSP+ சலுகையை இழக்கும் இலங்கை! வாக்குறுதியை நிறைவேற்றாத அரசாங்கம்
கூட்டமைப்பினரை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய குழு
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan