பொலன்னறுவை விமான நிலையம் தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை
இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய வரலாற்று சிறப்புமிக்க விமான நிலையமான பொலன்னறுவை - ஹிங்குராங்கொட (Polonnaruwa - Hingurangoda) உள்நாட்டு விமான நிலையத்தை சீரமைக்கும் திட்டத்தை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
மின்னேரியா (Minneriya) என அழைக்கப்பட்ட இந்த விமான நிலையமானது இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்தின் (England Royal Air Force) ரோயல் விமானப்படைக்கு ஒரு மூலோபாய தளமாக செயற்பட்டது.
தற்போது, அரசாங்கம் இந்த பழங்கால இடத்தை ஒரு சர்வதேச விமான நிலையமாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது.
ஓடுபாதை திருத்தம்
ஹிங்குராங்கொட (Hingurankota) விமான நிலையத்தின் ஆரம்ப நிர்மாண மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 2024 வரவு - செலவுத் திட்டத்தில் 2 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, முதற்கட்ட அபிவிருத்தியின் போது தற்போதுள்ள ஓடுபாதையை நீடிப்பதற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்ற நிலையில் 2287 மீட்டர் நீளமும், 46 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஓடுபாதை மொத்தம் 2500 மீட்டர் நீளத்திற்கு விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், விமான நிலையத்தில் பிரபலமான ஏர்பஸ் ஏ320 (Airbus A320) மற்றும் போயிங் பி737சி (Boeing B737c) உட்பட பெரிய விமானங்கள் தரையிறங்க வழியை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விரிவான நவீனமயமாக்கல் திட்டத்திற்கு மொத்தம் 17 பில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |