சஜித்துடன் அரசியல் பேச்சு : ரணில் நேரடிப் பொறுப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தரப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டிய அரசியல் பேச்சுகள் மற்றும் எதிர்காலக் கூட்டு நடவடிக்கைகள் குறித்த நேரடிப் பொறுப்பை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார் என்று முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(12.06.2026) ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியுடன் நடத்தப்பட வேண்டிய பேச்சு
இது குறித்து மேலும் குறிப்பிடுகையில், அதேவேளை சஜித் தரப்புடன் தொழில்நுட்ப ரீதியாக மேற்கொள்ள வேண்டிய ஏனைய வேலைத்திட்டங்கள் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியுடன் நடத்தப்பட வேண்டிய பேச்சுகளுக்கான பொறுப்புகள், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள பிரத்தியேகக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள், மறுசீரமைப்புகள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு எழுச்சியுடன் நடத்துவது என்பது குறித்து கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க விரிவாகப் பேசினார்.
குறிப்பாக, சஜித் தரப்புடனும் ஏனைய கூட்டு எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து எவ்வாறு அரசியல் ரீதியாக முன்னோக்கிச் செல்வது என்பது பற்றி இதன்போது முக்கியமாக ஆராயப்பட்டது.
புதிய அமைப்பாளர்களை நியமிப்பது
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் கட்சியின் தலைவர் ரணில் மிகவும் ஆரோக்கியத்துடனும் கலகலப்பாகவும் காணப்படுகின்றார்.

கலந்துரையாடலின் போது எங்களை நோக்கி, 'இப்போது எனது இதயம் மாத்திரமல்ல, முதுகுத்தண்டும் நன்றாக வலுவாக உள்ளது' என்று அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
இந்த அறுவைச் சிகிச்சையின் பின்னர் அவர் ஒரு 10 ஆண்டுகள் இளமையாக மாறியுள்ளார் என்றே கூற வேண்டும். எனவே, ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவம் குறித்துப் பேச வேண்டிய தேவை தற்போதைக்கு எழவில்லை.
கட்சியை கிராம மட்டத்தில் மறுசீரமைப்பது, புதிய தொகுதி அமைப்பாளர்களை நியமிப்பது மற்றும் நாடளாவிய ரீதியில் இளைஞர் முன்னணிகளை மீள ஆரம்பிப்பது போன்ற புதிய வேலைத்திட்டங்கள் அனைத்தையும், நியமிக்கப்பட்டுள்ள குழுக்களின் ஊடாக விரைவுபடுத்துமாறு எங்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam