BMW வாகன வழக்கில் முக்கியத் திருப்பம்: நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை ஏற்றுகொண்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உரிய வரிகளைச் செலுத்தாமல் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு பிஎம்டபிள்யூ (BMW) வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டு மற்றும் வரி மோசடி செய்த குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்வதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட இந்தச் சொகுசு வாகனம் தொடர்பாக, தனது வழக்கறிஞர்கள் வாயிலாக அவர் நீதிமன்றத்தில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
இந்த வாகனம் குறித்து வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்து, கடந்த ஒக்டோபர் 23 அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முந்தைய நாள், கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றில் 'WP C 24-0430' என்ற பதிவு இலக்கத்தைக் கொண்ட கருப்பு நிற பிஎம்டபிள்யூ வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணையைத் தொடங்கியது.
அந்த வாகனத்தை நிறுத்தி வைத்த நபர், அது ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குச் சொந்தமானது என்றும், அவரது சாரதியால் ஹோட்டலுக்குக் கொண்டு வரப்பட்டது என்றும் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.
பிஎம்டபிள்யூ வாகனம்
வாகனத்தைச் சோதனையிட்டபோது, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குச் சொந்தமான சில ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டன; ஆனால், அந்த வாகனத்தின் பதிவு தொடர்பான எந்த ஆவணமும் கிடைக்கவில்லை.

மேலதிக விசாரணையில், அந்த பிஎம்டபிள்யூ வாகனத்தில் இருந்த பதிவு இலக்கம், நாவல பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது என்பது தெரியவந்தது.
இதற்கிடையில், அந்த வாகனத்தின் சேஸிஸ் (chassis) எண்ணைக் கொண்ட வாகனம் எதுவும் இலங்கைக்குச் சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்படவில்லை என்பதை இலங்கை சுங்கத் திணைக்களம் உறுதிப்படுத்தியது.
பொலிஸாரின் விசாரணைகள்
அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் நடத்திய சோதனையில், அந்த வாகனம் சட்டவிரோதமாகக் கட்டமைக்கப்பட்டது (assembled) என்பது கண்டறியப்பட்டது.
மேலும், இந்த பிஎம்டபிள்யூ வாகனத்திற்கும், 2021-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் திருடப்பட்டதாகப் முறைபாடளிக்கப்பட்ட ஒரு சொகுசு வாகனத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்பதையும் பொலிஸாரின் விசாரணைகள் வெளிப்படுத்தின.

பொலிஸாரின் தகவல்படி, இந்த வாகனம் முதலில் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டு இங்கிலாந்தில் உள்ள ஒருவருக்கு விற்கப்பட்டிருந்தது.
இதன் சேஸிஸ் மற்றும் எஞ்சின் எண்கள், இங்கிலாந்தில் திருடப்பட்ட தாகப் முறைபாடளிக்கப்பட்ட வாகனத்துடன் தொடர்புடையவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.