செம்மணி அறிக்கை குறித்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட அறிவிப்பு
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை குறித்து, நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைவாகவே அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள அரச தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.
நீதிமன்றின் தீர்மானம்
அமைச்சர் மேலும், "பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் தயாரிக்கப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான இடைக்கால அறிக்கை கடந்த 19ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த அறிக்கையின் பிரதிகளை இந்த விவகாரத்துடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கமைய, அந்தத் தரப்பினர் அந்த அறிக்கையை முழுமையாக ஆராய்ந்து தமது கருத்துக்களையும் அவதானிப்புகளையும் நீதிமன்றத்தில் முன்வைப்பார்கள்.
இதற்கு மேலதிகமாக, அந்தப் பகுதியில் தோண்டி எடுக்கப்பட்ட மாதிரிகளின் பழமையைக் கண்டறியும் கார்பன் கால நிர்ணயச் சோதனையை மேற்கொள்வதற்கான அனுமதியை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திடம் கோரியுள்ளது.
இது தொடர்பான தனது தீர்மானத்தையும் உத்தரவையும் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதி அறிவிக்கவுள்ளது." என்றார்.