மதுபான சாலைக்குள் அத்துமீறிய பொலிஸார்: கலால் திணைக்கள அதிகாரிகள் எதிர்ப்பு
கொழும்பு - பாணந்துறை பிரதேசத்தில் மதுபான விற்பனைச் சாலையொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த பொலிஸாரின் செயற்பாடு தொடர்பில் கலால் திணைக்கள அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில், பாணந்துறை பின்வத்தை பிரதேசத்தில் மதுபான விற்பனைச் சாலையொன்றுக்குள் சட்டவிரோதமாக அத்துமீறி நுழைந்த பொலிஸார், அங்கிருந்து ஏராளமாக மதுபானப் போத்தல்கள் மற்றும் சிகரட் என்பவற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.
அதன்படி குறித்த மதுபான விற்பனை நிலையத்தின் ஜன்னல் ஊடாக அத்துமீறிப் பிரவேசிக்கும் பொலிஸார், அங்கிருந்து ஏராளமான மதுபானப் போத்தல்களையும் சிகரட்டுகளையும் எடுத்துச் செல்லும் சீசிரிவி காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
நீதிமன்றில் முன்னிலை
இந்நிலையில் சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொலிஸார்,
குறித்த மதுபானச் சாலை சட்டவிரோதமாக செயற்பட்டு வந்துள்ளது. அதன் காரணமாகவே அங்கிருந்த மதுபானப் போத்தல்களும் சிகரட்டுகளும் கைப்பற்றப்பட்டது.
மேலும், மதுபானச் சாலையின் மூன்று ஊழியர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளோம்” என தெரிவித்துள்ளனர்.
எனினும் சட்டபூர்வ அனுமதி பெற்ற மதுபானச் சாலையொன்றுக்குள் புகுந்து பொலிஸார் அவ்வாறு மதுபானப் போத்தல்களை எடுத்துச் செல்ல எதுவித அதிகாரமும் இல்லை என்று கலால் திணைக்கள அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறான சட்டபூர்வ மதுபானச் சாலைகள் சட்டவிரோதமாகச் செயற்பட்டாலும் அவற்றுக்கு எதிரான சட்டநடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரம் தமது திணைக்களத்துக்கு மட்டுமே உரியது என்றும், பொலிஸார் இந்த விடயத்தில் அத்துமீறி நடந்திருப்பதாகவும் கலால் திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்தும் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
