வவுனியாவில் வீட்டுக்குள் நுழைந்து விபத்துக்குள்ளான பொலிஸ் பொறுப்பதிகாரியின் வாகனம்
வவுனியா - புளியங்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரியின் வாகனம் தனியார்
வீடொன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகிய நிலையில் அங்கு பெரும் பதற்றம் தோன்றியதுடன் அந்தப் பிரதேசத்திற்கு விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் இன்று (04) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வீட்டிற்கும், அங்கிருந்த சொத்துக்களுக்கும் இந்த விபத்தினால் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மது போதை
மது போதையில் அதிவேகமாக வாகனத்தை செலுத்தியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளதுடன், இதனால் பொலிஸாருடன் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து அந்தப் பிரதேசத்திற்கு விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை வாகனத்தில் பயணித்த பொலிஸாரை, நெடுங்கணி பொலிஸார் இரகசியமாக காப்பாற்றி வெளியில் கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
வீட்டின் முன் பகுதி வேலி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவற்றையும், வீட்டிற்கு உரிய மின்சார இணைப்பினையும் மோதி உடைத்துள்ளதால் மின்சார துண்டிக்கப்பட்டு வீட்டில் உள்ள இலத்திரன்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்
சுமார் 20 இலட்சம் பெறுமதியான பொருட்களே இவ்வாறு சேதமடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதன்போது, விசாரணைகளை நெடுங்கிணி பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் தனக்கு நட்டஈடு வேண்டும் என கூறி சேதமடைந்த மோட்டார் சைக்கிள், இலத்திரனியல் பொருட்கள், வீட்டின் முன் வேலி, தூண்கள், தகரங்கள் ஆகியவற்றுக்கு நட்டஈடு வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |