கைது நடவடிக்கைக்கு இடையூராக இருந்த தாய் மற்றும் மகனுக்கு விளக்கமறியல்
தாய் மற்றும் மகன் விளக்கமறியல்
திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமைக்கு சென்ற பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தாய் மற்றும் மகனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருகோணமலை - ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய தாயும், 26 வயதுடைய மகனுமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் விற்பனை குற்றச்சாட்டு
போதைப்பொருள் விற்பனை செய்து வருவதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய குறித்த இளைஞரை மொரவெவ பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது இளைஞரின் தாயார் சம்பவ இடத்துக்கு வந்து, சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரின் கையை கடித்து காயப்படுத்தி கடமைக்கு இடையூறு
ஏற்படுத்தியதாக நீதவான் முன்னிலையில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



