அரசாங்கத்துக்கு எதிரான போராட்டக்காரர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை
கோட்டா கோ கம உள்ளிட்ட இடங்களில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடும் முக்கியஸ்தர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 06ம் திகதி கொழும்பு கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் 10ம் திகதி பெலவத்தை, இசுருபாய கல்வி அமைச்சின் முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் வன்முறையைத் தூண்டும் வகையில் நடந்து கொண்டுள்ளதாக முன்னணி போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கொழும்பு கோட்டை மற்றும் கடுவலை நீதவான் நீதிமன்றங்களில் அது தொடர்பான முதல் தகவல் அறிக்கை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவு
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களின் முன்னணி செயற்பாட்டாளர்களான அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே, அதன் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர, போராட்டக்களத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களான ரதிந்து சேனாரத்ன (ரெட்டா) , ஜகத் மனுவர்ண, தம்மிக முனசிங்க, ரத்கரவ்வே ஜீனரத்ன தேரர், கல்வெவ சிறிதம்ம தேரர், எரங்க குணசேகர, சிங்களத் தொலைக்காட்சி நாடக நடிகர் ஜெஹான் அப்புஹாமி ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாரின் அறிக்கையின் பேரில் கோட்டை மற்றும் கடுவலை நீதவான் நீதிமன்றங்களினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த முன்னணி போராட்டக்காரர்களை கைது செய்வதன் மூலம் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை நசுக்க பொலிஸார் முயற்சித்துள்ளதாகவும், எனினும் இது தொடர்பில் தாங்கள் பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடி:ஜனாதிபதி உட்பட 13 பேருக்கு எதிராக வழக்கு |