பொருளாதார நெருக்கடி:ஜனாதிபதி உட்பட 13 பேருக்கு எதிராக வழக்கு
இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டும் என்று குற்றம் சுமத்தி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட 13 பிரதிவாதிகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் மேலும் மூன்று பேர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
முக்கியமான பிரதிவாதிகள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், திறைசேரியின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட 13 பேர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி உருவாகும் விதத்தில் வெளிப்படைத்தன்மை இன்றி, பொறுப்பின்றி உயர் மட்டத் தீர்மானங்களை எடுத்தமைக்கு எதிராக இந்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு ஏதுவாக அமைந்த சில காரணங்களும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
1:2019 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக வரிச் சலுகையை வழங்கியதன் ஊடாக அரச வருமானத்தை குறைத்துக்கொண்டமை.
2:வரிச் சலுகையை திரும்ப பெற தவறியமை.
3:சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வதில் தாமதத்தை ஏற்படுத்தியமை.
4:ரூபாவின் பெறுமதி தொடர்பாக உரிய நேரத்தில் முடிவுகளை எடுக்காமை.
மேற்படி தீர்மானங்கள் தொடர்பில் பிரதிவாதிகள் நேரடியாக பொறுப்புக் கூற வேண்டும் என மனுதாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சந்திரா ஜயரத்ன,ஜெஹான் கனகரத்ன மற்றும் ஜூலியன் போலிங் ஆகியோர் ஏனைய மனுதார்களாவர்.