இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பாரிய போதைப்பொருட்கள்! தமிழகத்தில் சிக்கிய கடத்தல் கும்பல்
இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக எஸ்.பி.பட்டினம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் பெறுமதியான 19.8 கிலோ ஹஷீஷ் போதை பொருளை பொலிஸார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக முன்னதாக போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளியை கைது செய்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதைப்பொருள் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை உட்கோட்டம், எஸ்.பி.பட்டினம் பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாசிப்பட்டினம் பாசியம்மன் கோவில் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக ஹஷீஷ் போதை பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக எஸ்.பி.பட்டினம் காவல் ஆய்வாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படையினர் நேற்று செவ்வாய் இரவு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து சோதனை செய்த போது, அவரிடம் இருந்து 2 கிலோ ஹஷீஷ் (கஞ்சா செடியில் இருந்து எடுக்கப்படும் பிசின் போன்ற போதைப்பொருள்) போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்பான வழக்கு
தொடர்ந்து அந்த நபரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில், அவரது வீட்டில் மேலும் போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையில் 17.8 கிலோ ஹஷீஷ் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
[52MWPL
கடற்கரை மற்றும் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளில் மொத்தம் 19.8 கிலோ ஹஷீஷ் போதை பொருள் சிக்கியது.
இவை இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக பதுக்கி வைக்கப் பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதையடுத்து, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர் திருவாடானை தளிர் மருங்கூர் பகுதியைச் சேர்ந்த மனோ (34) என்பது தெரியவந்தது.
இவர் ஏற்கனவே தொண்டி மற்றும் எஸ்.பி.பட்டினம் காவல் நிலையங்களில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகளில் தொடர்புடையவர்.
பெருமளவிலான ஹஷீஷ் போதைப்பொருள்
மேலும், எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முந்தைய வழக்கில் 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கில் மனோ தலைமறைவாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
தற்போது மீண்டும் பெருமளவிலான ஹஷீஷ் போதைப்பொருளுடன் சிக்கிய அவரை பொலிஸார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, பறிமுதல் செய்யப்பட்ட ஹஷீஷ் போதை பொருளின் மூலாதாரம், இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்ட வழிமுறை, கடத்தலுக்கு உதவியவர்கள் மற்றும் சர்வதேச கடத்தல் தொடர்புகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எஸ்.பி.பட்டினம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 19.8 கிலோ ஹஷீஷ் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் தலை மறைவாக இருந்த குற்றவாளி கைது செய்யப்பட்ட சம்பவம் கடலோரப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.