பருத்தித்துறை நகரசபை அமர்வில் நிறைவேற்றப்பட்ட கண்டன தீர்மானங்கள்
பருத்தித்துறை துறைமுகத்திற்கு முன் அமைந்துள்ள இராணுவ சிற்றுண்டி சாலையில், புகைத்தல் பொருட்கள் விற்பனையை தடை செய்வதென்றும், நகர சபையின் உரிய அனுமதிகள் பெறப்படவில்லை என்றால் அந்த சிற்றுண்டிசாலை யை மூட வேண்டும் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இன்று(20.01.2026) தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் பருத்தித்துறை நகரசபையின் அமர்வின் போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
தீர்மானங்கள்
இதன்போது, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. கனரக வாகனங்கள், பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன் காலை 6:45 மணி முதல் 8:00 மணிவரையும், முடிவடையும் நேரத்தில் காலை 12:00 முதல் 2:00 மணிவரை பயணிக்க தடை விதிப்பதென்றும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

2. புதிய ஜேசிபி இயந்திரம் ஒன்று கொள்வனவு செய்வது தொடர்பாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் அனல் ரெஜி கொண்டுவரப்பட்ட தீர்மானம் அதன் தேவைபாடு தொடர்பாக அடுத்த கூட்டத்தில் ஆராயப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
3. மரக்கறி சந்தை மீண்டும் நவீன சந்தை தொகுதிக்கு மாற்றபட்டமையால் ஏற்கனவே குத்தகைக்கு வழங்கபட்டவருக்கு வழங்குவது என்றும், முனையில் அமைந்துள்ள சிறுவர் மகிழ்வகத்திற்கு வருகை தருவோர்க்கு ரூபா 20/- பணம் அறவீடு பரீட்சாத்தமாக 3 மாதம் வரை அறவிடுவது என்றும், மகிழ்வகம் காலை 9:00 மணியிலிருந்து மாலை 9:00 மணிவரையும் திறப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
4. முனை வெளிச்ச வீடு திருத்தபட்டு பார்வையாளர்களிடமிருந்து கட்டணம் அறவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
5. இடையூறாக நிறுத்தப்படும் தனியார் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஊர்திகளுக்கு உடனடி தண்டப்பணமாக ரூபா 2000/- அறவிட வேண்டும் என்றும் நகரசபை விதிகளை மீறி வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கும், மரக்கறி சந்தையிலிருந்து 500 மீற்றர் தூரத்திற்குள் மரக்கறி மற்றும் சந்தை பொருட்கள் விற்பனை செய்வோருக்கும் ரூபா 2000 தண்டம் அறவீடு செய்ய வேண்டும் என்றும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. கைப்பற்றபட்ட பொருட்களுக்கு உரிய நடவடிக்கை எடுப்பது என்றும், நகர சபை எல்லைக்குள் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுவதனை ஊக்கிவிப்பதென்றும், இரண்டு பிரபல பாடசாலைகள் அருகில் அமைந்துள்ள நிலையில் இராணுவத்தின் சிற்றுண்டிசாலையில் புகைத்தல் விற்பனை செய்வத்தை தடை செய்வது என்றும் கூறப்பட்டுள்ளது.
7.இராணுவம் நகரசபை சட்டங்களுக்கு உட்பட்டு உரிய அனுமதி பெறப்படாது இயங்குவதால் அதற்கான உரிய அனுமதி பெறப்படவில்லை என்றால் அந்த இராணுவ சிற்றுண்டிசாலையை மூடுவது என்றும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், இந்த ஆண்டுக்கான புதிய நிதிக்குழு, சுகாதாரக் குழு, பெறுகை குழு உட்பட பல குழுக்களும் தெரிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், இன்றைய தினம் நடந்த அமர்வில் 15 உறுப்பினர்கள் உள்ள சபையில் 14 உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
