இனவாதத்தைக் கிளறச் சதி - எதிர்க்கட்சிகள் மீது பிரதி அமைச்சர் சுனில் வட்டகல குற்றச்சாட்டு
சிங்கள பௌத்தத்துக்கு அச்சுறுத்தல் என்று கூறிக்கொண்டு நாட்டில் மீண்டும் இனவாத முரண்பாடுகளை ஏற்படுத்த ஒருதரப்பினர் முயல்கின்றனர் என்றும், இவ்வாறான செயற்பாடுகளுக்கு அரசு ஒருபோதும் இடமளிக்காது என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(11) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மீண்டும் இனவாத முரண்பாடுகள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காகவே ஞானசார தேரருக்குக் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைச் சட்ட விதிகளின் பிரகாரமே அவரது காவியுடை நீக்கப்பட்டுள்ளது என்று சிறைச்சாலைத் தலைமையகம் தெளிவுபடுத்தியுள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களே.
ஞானசார தேரர் விவகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தியும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் குறுகிய அரசியல் இலாபத்துக்காக இனவாதக் கோணத்தில் திசைதிருப்பி வருகின்றன.
இரட்டை நிலைப்பாடு
அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் போது ஜனாதிபதி நீதித்துறை அதிகாரத்தில் தலையிடுவதாகக் குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சியினர், தற்போது ஞானசார தேரர் விவகாரத்தில் ஜனாதிபதியைத் தலையிடுமாறு அழுத்தம் கொடுப்பது அவர்களின் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுகின்றது.

பௌத்த மதத்தை முன்வைத்து மீண்டும் இனவாதத்தைக் கிளற எடுக்கும் முயற்சிகளுக்கு அரசு ஒருபோதும் அனுமதி அளிக்காது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் இத்தகைய செயற்பாடுகள் கீழ்த்தரமானவை என குறிப்பிட்டுள்ளார்.