ஞானசார தேரருக்கு சிறையில் வழங்கப்படும் பணி
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு சிறையில் வழங்கப்பட உள்ள பணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் கைதிகளுக்கு சிறைச்சாலையில் பணிகள் வழங்கப்படுவது வழமையானதாகும். அந்த வகையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரருக்கு விரைவில் சில பணிகள் வழங்கப்பட உள்ளதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக ஞானசார தேரர் சிறைச்சாலையின் அச்சகப் பிரிவின் அச்சுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெயர் குறிப்பிட விரும்பாத சிறைச்சாலை அதிகாரியொருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரின் காவி உடை களையப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரருக்கு சிறைச்சாலையினால் வழங்கப்படும் பணி என்ன என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சில மாதங்களுக்கு முன்னதாக தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்னவிற்கும் அச்சுப் பணி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.