கிண்ணியா நடுத்தீவு ஆயுர்வேத வைத்தியசாலையின் அவல நிலை!
கிழக்கு மாகாண அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் 2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, தற்போது பல மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகளின் நம்பிக்கைக்குரிய இடமாக விளங்கும் கிண்ணியா நடுத்தீவு மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை, போதிய வளங்களின்றி பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இந்த வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு நாளாந்தம் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகை தருகின்றனர்.
விடுதி வசதி, கிளினிக் மற்றும் சத்திரசிகிச்சை என மூன்று பிரிவுகளும் இயங்கி வரும் நிலையில், நோயாளிகள் தங்குவதற்கோ அல்லது அமர்ந்து இருப்பதற்கோ போதிய ஆசன வசதிகள் இல்லை.
சேவையில் பெரும் பாதிப்பு
இதனால், முதியவர்கள் உட்பட நோயாளிகள் மர நிழல்களிலும் வீதியோரங்களிலும் பல மணிநேரம் காத்துக்கிடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் தற்போதைய நிலை குறித்து, வைத்திய பொறுப்பதிகாரி A.W. மாஷாதிடம் வினை வியபோது, "வைத்தியசாலைக்கு குறைந்தது ஆறு வைத்தியர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது இருவர் மாத்திரமே பணியில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
"பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலேயே இந்த வைத்தியசாலையை கொண்டு நடத்துகிறோம். இந்த மாதம் மட்டும் இரண்டு பித்தப்பை கல் அகற்றும் அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளன.
நோயாளர்கள் அவதி
இன்னும் 10 நோயாளிகள் காத்திருக்கின்றனர். ஆனால் வைத்தியர் தட்டுப்பாடு காரணமாக உரிய காலத்தில் சிகிச்சைகளை வழங்க முடிவதில்லை" என அவர் கவலையுடன் தெரிவித்தார்.

வாரத்தில் ஐந்து நாட்களும் கிளினிக் சேவைகள் நடைபெறுகின்றன. ஆனால், மின்சார வசதியே இல்லாத ஒரு சிறிய, இருண்ட பழைய கட்டிடத்திலேயே இந்தச் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் கூரை இடிந்து விழும் நிலையில் காட்சியளிக்கின்றது.
காலை 6 மணிக்கே வரும் நோயாளிகள், சிகிச்சை முடிந்து திரும்ப மாலை 4 மணி ஆகிவிடுகிறது. அமர ஆசனங்கள் இல்லாததால், "கால் கடுக்க" மணிக்கணக்கில் நிற்பதே தங்களுக்கு மேலதிக உபாதைகளை ஏற்படுத்துவதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan