1750 ரூபா சம்பள உயர்வு: ஜனாதிபதியை கொண்டாடிய தோட்டத் தொழிலாளர்கள்
ஜனாதிபதியின் வரவு–செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட 1750 ரூபா நாளாந்த சம்பளம் கிடைத்ததை தொடர்ந்து, தோட்டப்புறங்களில் தொழிலாளர்கள் பாற்சோறு சமைத்து, பட்டாசு கொளுத்தி, பூஜை வழிபாடுகள் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதற்கமைய, நோர்வூட் - எல்படை தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 1550 ரூபா அடிப்படை சம்பளமாகவும், வரவுக்கான கொடுப்பனவாக 200 ரூபாவும் வழங்கப்படுவதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, நோர்வூட்- எல்படை தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி பூஜைகள் செய்ததுடன், பாற்சோறு சமைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த தொழிலாளர்கள்
இது குறித்து கருத்து தெரிவித்த தொழிலாளர்கள்,
கடந்த காலங்களில் சம்பள உயர்வுக்காக பல போராட்டங்களில் ஈடுபட்டதாகவும், ஆனால் இந்த முறை எந்தவித போராட்டமும் இன்றி, மக்களை வீதிக்கு இறக்காமல், ஜனாதிபதி உறுதியளித்தபடி சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதற்காக ஜனாதிபதிக்கும் பெருந்தோட்டத் துறை அமைச்சர்களுக்கும் நன்றியை தெரிவித்தனர்.
மேலும் சிலர் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் தொழிற்சங்கங்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து சம்பள உயர்வை பெற்றுக் கொடுத்த போதிலும், அது போதியளவில் அமையவில்லை என்றும், வரவுக்கான கொடுப்பனவு முறையாக வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
தற்போதைய ஜனாதிபதி எந்தவித போராட்டமும் இன்றி கூடுதல் சம்பள உயர்வை பெற்றுக் கொடுத்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது எனவும், இதற்காக ஜனாதிபதிக்கும் அவரது அரசாங்கத்திற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

