நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென ஏற்பட்ட விபரீதம் : திகில் அனுபவத்தை வெளியிட்ட பயணி
பயணிகளுடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த நிலையில் திடீரென விமானம் குலுங்கியதால் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் பாதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சிங்கப்பூர் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் சிஇஓ வருத்தம் வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் குறிப்பிடுகையில், “பயணிகளின் உடமைகள் அங்கும் இங்குமாக சிதறி விழுந்தன. விமானத்தில் இருந்த காபி மற்றும் உணவு வகைகள் என அனைத்தும் சிதறின. பலருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. வலியால் பலரும் அலறி துடித்தனர்” என குறிப்பிட்டுள்ளார்.
விமானத்தில் நேர்ந்த விபத்து
பிரித்தானியாவின் லண்டன் நகரில் இருந்து சிங்கப்பூருக்கு போயிங் 777-300ER ரக விமானம் நேற்று சென்று கொண்டிருந்து.
இந்த விமானம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது. 211 பயணிகள் மற்றும் 18 விமான பணியாளர்கள் என மொத்தமாக 229 பேர் இந்த விமானத்தில் பயணித்தனர்.
இந்த பயணத்தின் போது திடீரென விமானம் பயங்கரமாக குலுங்கியது. அதனால் அவசர நிலையை கருத்தில் கொண்டு விமானி அந்த விமானத்தை பேங்கொக் நகரில் மதியம் 3.45 மணி அளவில் தரையிறக்கினார்.
இதில் பயணித்த பிரிட்டன் நாட்டை சேர்ந்த 73 வயது பயணி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். பெரும்பாலான பயணிகள் காயமடைந்தனர்.
விமானம் தரையிறங்கியதும் அதில் பயணித்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி துரிதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து இதற்கான காரணம் என்ன என்பது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் சிங்கப்பூர் எயார்லைன்ஸ் சிஇஓ ஃவாங்க் வீடியோ தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர், “211 பயணிகள் மற்றும் 18 விமான பணியாளர்கள் விமானத்தில் பயணித்தனர். அவசர சூழலை கருத்தில் கொண்டு விமானத்தை பேங்கொக் நகரில் விமானி தரையிறக்கினார். எதிர்பாராத இந்த அசம்பாவித சம்பவம் எங்களுக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
இதில் பயணி ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்துள்ளனர். சிங்கப்பூர் எயார்லைன்ஸ் சார்பில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நேரத்தில் நாங்கள் அவரது குடும்பத்துக்கு உறுதுணையாக நிற்போம். விமானத்தில் பயணித்தவர்களுக்கு ஏற்பட்ட இந்த அபாயகர அனுபவத்துக்கு நாங்கள் வருந்துகிறோம். அனைவருக்கும் துணையாக நாங்கள் இருப்போம். இது தொடர்பான விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
விமானம் குலுங்கியது குறித்து பயணிகள் தெரிவிக்கையில்,
“திடீரென பயணிகள் விமானத்தின் கூரை மீது மோதி நாங்கள் கீழ்பக்கமாக விழுந்தோம். இதில் சீட் பெல்ட் அணியாதவர்கள் மோசமாக காயமடைந்தனர். சிலரது தலை பகுதி, பைகள் வைக்கும் கேபினில் போய் மோதியது. விமான பணியாளர்கள் மற்றும் கழிவறையில் இருந்தவர்கள் மிக மோசமாக காயமடைந்தனர். பெரும்பாலானவர்களுக்கு தலை மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டது” என விமானத்தில் பயணித்த மாணவர் ஒருவர் தெரிவித்தார்.
“நான் விமானத்தின் கூரையில் மோதி காயமடைந்தேன். நல்வாய்ப்பாக எனது குடும்பத்தினர் அனைவரும் உயிரோடு உள்ளனர். எனது மகன் இரண்டு வரிசை தரையில் பின்னோக்கி விழுந்தார். கழிவறையில் இருந்த நபர் மிகவும் மோசமாக காயமடைந்தார்” என பிரித்தானியா நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“பயணிகளின் உடமைகள் அங்கும் இங்குமாக சிதறி விழுந்தன. விமானத்தில் இருந்த காபி மற்றும் உணவு வகைகள் என அனைத்தும் சிதறின. பலருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. வலியால் பலரும் அலறி துடித்தனர். ஒருவருக்கொருவர் உதவ முடியவில்லை” என ஆண்ட்ரூ டேவிஸ் என்ற பயணி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |