கிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது - பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவல்
கிளிநொச்சி - பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முட்கொம்பன் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் கோடா உள்ளிட்ட உபகரணங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முட்கொம்பன் செக்காலைப் பகுதிக்கு அண்மித்த காட்டுப் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுவதாகப் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
ஒருவர் கைது
இதனைத் தொடர்ந்து, பொலிஸார் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், அங்கிருந்த கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் ஏற்கனவே பல தடவைகள் கசிப்பு உற்பத்தி செய்து விற்பனை செய்துள்ளதுடன், நீதிமன்றத்தினால் ஏற்கனவே தண்டிக்கப்பட்டுள்ளமையும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த பிரதேசத்தின் பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கசிப்பு உற்பத்தியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போதிலும், ஒரு சில நபர்களின் இவ்வாறான செயற்பாடுகளால் மீண்டும் போதைப்பொருள் பாவனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.