தெவிநுவர ஸ்ரீவிஷ்ணு தேவாலய பெரஹராவில் காவடி ஆட்டக் குழுக்கள் பங்கேற்பதற்கு அனுமதி
தெவிநுவர (தேவேந்திரமுனை) ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹராவில் காவடி ஆட்டக் குழுக்கள் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கிடைக்கப் பெற்ற புலனாய்வு அறிக்கைகளின் பிரகாரம் பாதுகாப்பு காரணங்களுக்காக காவடி ஆட்டத்தை நீக்குமாறு பொலிஸார் முதலில் பரிந்துரைத்திருந்த போதிலும், தற்போது அந்த முடிவு மாற்றியமைக்கப்பட்டு அனைத்து காவடி குழுக்களுக்கும் பெரஹரவில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பாதாள உலக தரப்புகளுக்கு இடையில் மோதல்
ஆரம்பத்தில், குறிப்பிட்ட சில குழுக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கும் தீர்மானத்தினால், அதனுடன் தொடர்புடைய சில பாதாள உலகக் குழுக்களுக்கு இடையே உரசல்கள் மற்றும் பதற்றமான சூழ்நிலைகள் ஏற்பட்டன.
இல்லிகாரம் தொடர்பில் தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமேவுக்கு, கஞ்சிபானி இம்ரான் மரண அச்சுறுத்தல் விடுத்தமையை அடுத்து இவ்விவகாரம் நாட்டின் முழுக் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

இம்ரானின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து தெவுந்தர பகுதியைச் சேர்ந்த பிரபல பாதாள உலகக்கும்பல் தலைவனும், போதைப்பொருள் கடத்தல்காரனாகவும் அறியப்படும் தெஹிபாலே மல்லி மற்றும் கஞ்சிபானி இம்ரான் ஆகிய தரப்புகளுக்கு இடையில் மோதல் வெடித்தது.
தமது மத நம்பிக்கைகள் தொடர்பில் தலையிட வேண்டாம் என கஞ்சிபானி இம்ரானுக்கு பாலே மல்லி வெளியிட்டுள்ள ஓடியோ ஒன்றும் வெளியாகியிருந்தது.
இந்தப் பின்னணியில், கஞ்சிபானியின் கூட்டாளி எனக் கூறப்படும் ஷான் பிரமித்தின் மாமாவின் வீட்டை இலக்காகக் கொண்டு, தெஹிபாலே மல்லியின் ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் சிலரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை
இச்சம்பவங்களை அடுத்து, புலனாய்வு அறிக்கையை மேற்கோள்காட்டியும், நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டும், காவடி நடனத்தை மாத்திரம் பெரஹராவிலிருந்து நீக்குமாறு பொலிஸ் மா அதிபர் பரிந்துரை செய்திருந்தார்.
ஆனால், தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே திங்கட்கிழமை (27) காலை அனைத்து காவடி குழுக்களுக்கும் பெரஹராவில் கலந்துகொள்ளும் அனுமதியை வழங்குவதற்கு திடீர் தீர்மானம் எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த பரஸ்பர முரண்பாட்டை அடுத்து, இன்று மாத்தறை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற இது தொடர்பான கூட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, மாத்தறை மாவட்டச் செயலாளர் சந்தன திலகரத்ன, உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் மேற்கொண்ட தீர்மானத்தின் படி அனைத்து காவடி குழுக்களுக்கும் பெரஹரவில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பாதாள உலகக் குழுக்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு கவலைகள் காரணமாக, ஊர்வலத்தின் பாதுகாப்பிற்காக மேலதிக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் (STF) பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.