கொழும்பில் சந்தைப் பொருட்களுக்கு அதிரடி சோதனை - அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
தேசிய உணவுப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, சந்தையில் விற்பனை செய்யப்படும் நுகர்வோர் பொருட்களின் தரம் மற்றும் தரநிலைகளைச் சரிபார்க்கும் ஒரு சிறப்புத் திட்டம் ஒன்று செயற்படுத்தப்படவுள்ளதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு அறிவித்துள்ளது
இது தொடர்பான அறிவிப்பு இன்று(28.07.2026) வெளியிடப்பட்டுள்ள நிலையில், பெட்டா பொதுச் சந்தை வளாகத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.
உணவு பொருட்கள் உட்பட சோதனை
இதன்போது, சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் உணவுப் பொருட்கள், மின்சார உபகரணங்கள் மற்றும் பொம்மைகள் போன்ற நுகர்வோர் பொருட்கள், நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு இணங்குகின்றனவா என்பதைச் சரிபார்க்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நுகரப்படும் உணவுப் பொருட்களில் மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் உள்ளனவா என்பதை ஆராய்வதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகின்றது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் உள்ள இலங்கைத் தர நிர்ணய நிறுவனம் (SLS) மற்றும் தொழிற்துறை தொழில்நுட்ப நிறுவனம் (ITI) ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களும் இந்தத் தரச் சோதனைத் திட்டத்தில் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
பொருட்களின் நிலை குறித்து நுகர்வோருக்கு நேரடியாகத் தெரிவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோருக்குத் தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெட்டாவில் ஆரம்பமாகும் சோதனை நடவடிக்கை
இது தொடர்பான நிகழ்வில் கலந்துக் கொண்ட பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன கருத்து தெரிவிக்கையில்,
"உணவுப் பொருட்கள், மின்னணுப் பொருட்கள் மற்றும் பொம்மைகள் ஆகியவை ஒரே தரத்தில் உள்ளதா என்பதைச் சரிபார்ப்பது நாங்கள் செய்யும் பணிகளில் ஒன்றாகும்.

எங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள எஸ்.எல்.எஸ் நிறுவனம் மற்றும் ஐ.டி.ஐ நிறுவனம் ஆகியவை, தொடர்புடைய பிற நிறுவனங்களுடன் இணைந்து கோட்டைக்குச் சென்று, உணவில் ஏதேனும் கலக்கப்பட்டுள்ளதாக என்பதையும், மற்ற பொருட்களின் தரநிலைகள் அதற்கேற்ப உள்ளதா என்பதையும் சரிபார்க்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
நாங்கள் பெட்டாவுக்குச் சென்று அங்குள்ள மக்களின் நிலை குறித்த தகவல்களை வழங்குவோம். மேலும், வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் அதில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோருக்கும் போதுமான விளக்கங்களையும் கொடுக்கவுள்ளோம் என்றார்.