விமல் வீரவன்ச - கம்மன்பில உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கில் முக்கிய உத்தரவு
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை கைது செய்வதற்கு எதிராக நடத்தப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பில், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாட்டை தொடர்ந்து முன்னெடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு நேற்றுமுன்தினம் 8ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுரேஷ் சலே கைது
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர, சுகீஸ்வர பண்டார, அசங்க நவரத்ன மற்றும் மகிந்த பதிரண ஆகிய 6 பேருக்கு எதிராகவே இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுரேஷ் சலேவை கைது செய்வதற்கு எதிராக கடந்த ஜூலை 7ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகம் நடைபெற்றது.

இதன்போது குறித்த 6 பேரும் தெரிவித்த சில கருத்துகள் நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில் இருந்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பான முறைப்பாடு முதலில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது.
வழக்கு விசாரணை
இந்நிலையில், வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கு போதுமான காரணங்கள் உள்ளதா என்பதை மேன்முறையீட்டு நீதிமன்றம் பரிசீலிக்கும். போதுமான காரணங்கள் இருப்பதாக நீதிமன்றம் தீர்மானித்தால், குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு உத்தியோகபூர்வ அறிவிப்பு அனுப்பப்பட்டு அதன் பின்னர் வழக்கு விசாரணை நடைபெறும்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் தங்கள் தரப்பு சாட்சிகளை முன்வைத்து, தங்களது நிலைப்பாட்டை விளக்குவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.
இறுதியில், நீதிமன்ற அவமதிப்பு குற்றம் இடம்பெற்றதா இல்லையா என்பது குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என கூறப்படுகின்றது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25