கட்டாக்காலி மாடுகளால் அவதியுறும் புதுக்குடியிருப்பு பொதுமக்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் புகழ்பெற்ற நகரங்களில் புதுக்குடியிருப்பு முதன்மையானது.
புதுக்குடியிருப்பு சந்தியில் மக்கள் நடமாட்டம் கூடிய மாலை வேளையில் மாடுகள் வீதியில் வந்து ஓய்வெடுக்கின்றன.
போக்குவரத்துக்கு இடையூறாக இவை அமைந்து விடுவதுடன் விபத்துக்களுக்கும் காரணமாகி விடுகின்றன என சுட்டிக் காட்டப்பட்ட போதும் இதுவரை எந்த தீர்வுகளும் இல்லை.
வீதி விபத்துக்களை தவிர்க்கும் வழிமுறை
முல்லைத்தீவின் பல வீதிகளில் மாடுகள் தங்கள் இரவுப் பொழுதை கழிப்பதனால் போக்குவரத்து இடையூறுகள் ஏற்படுவதோடு பல சந்தர்ப்பங்களில் இவற்றால் ஏற்பட்ட வீதி விபத்துக்கள் மரணங்களை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வீதி விபத்துக்களை தவிர்க்கும் வழிமுறைகள் என்ற தொனிப்பட மேற்கொள்ளப்படும் ஆய்வுகளில் பல தடவை வீதிகளில் காணப்படும் கட்டாக்காலி மாடுகள் மற்றும் நாய்களால் அதிகளவான விபத்துக்கள் நடைபெற்றன என அறியமுடிகிறது.
மாஞ்சோலை வைத்தியசாலை
புதுக்குடியிருப்பு சந்தியில் உள்ள மாடுகள் போன்றே முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை (மாஞ்சோலை) முன்பாகவும் மாடுகள் மாலையில் ஓய்வெடுக்கின்றன.
மாடு வளர்ப்போர் இரவுப்பொழுதுகளில் மாடுகளை பட்டியில் அடைத்து பேணாமையே இந்த நிலைமைக்கு காரணம் என கூறப்படுகிறது.
மக்களிடையே வீதிகளில் மாடுகள் நிற்பதை தவிர்த்திடும் வழிகள் பற்றிய உரையாடலில் ஆச்சரியப்படுமளவுக்கு அவர்களது மனவோட்டங்கள் இருப்பதை அறிய முடிந்தது.
அரசாங்க ஊழியராக பணியாற்றுபவராக இருந்தாலும் அவரிடமும் மாடுகள் இருக்கின்றன. வழிமுறைகள் பற்றி பேசுவதில் இருக்கும் அக்கறை மாடுகள் வீதியில் இருக்காது தவிர்ப்பதை செயல்முறையில் காட்டுவதில் தயக்கம் காட்டுகின்றனர்.
யார் பூனைக்கு முதலில் மணி கட்டுவது என்பது மாடு வளர்ப்போரினது பிரச்சினை என வர்த்தகர் ஒருவர் குறிப்பிட்டார்.
வீதிப்போக்குவரத்து பொலிஸார்
மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டுமின்றி பகல் பொழுதுகளில் கூட வீதிக் கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கும் பொலிஸார் அவர்களுக்கு அண்மையில் மாடுகள் வீதியை மறித்தபடி இருக்கின்ற போதும் அவற்றை அகற்றுவதில் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை.
வாகனங்களை மறித்து சோதனையிடுவதும் தண்டப்பணம் அறவிடுதலிலுமே அதிகம் கவனம் எடுக்கின்றனர்.
வீதியை போக்குவரத்துக்கு ஒழுங்கு செய்யும்போது வாகனங்கள் மட்டுமல்ல இத்தகைய கால்நடைகளும் இடையூறு ஏற்படுத்தும் என்பதும் அதனை தடுக்க சட்டநடவடிக்கை தேவை என்பதும் புரிந்து கொள்ளப்படவில்லை என்பதை இத்தகைய செயல்கள் காட்டுகின்றன என விடுதலை புலிகளின் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றிய முன்னாள் போராளியொருவர் தன் அனுபவத்தோடு ஒப்புநோக்கி கருத்திட்டமையும் குறிப்பிடத்தக்கது.
புதுக்குடியிருப்பு சந்தி
இந்தச் சந்தி போக்குவரத்து முக்கியத்துவமிக்கதாக விளங்குகின்றது. முல்லைத்தீவு - பரந்தன் வீதி என அழைக்கப்படும் இது A35 வீதி என தரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சந்தியில் இருந்து முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், பரந்தன், மாத்தளன் ஆகிய பிரதான நகரங்களை இணைக்கும் வீதிகள் ஆரம்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் இந்த நகரமும் நகர வீதிகளும் அதிக முன்னுரிமை வழங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தமையும் இங்கே நினைவில் கொள்ளத்தக்கது என பொதுமக்கள் பலர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |









அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
