மின்சார சபை ஊழியர்களின் எதிர்ப்புக்கு அநுர வழங்கிய பதில்
நாட்டின் எரிசக்தி சுதந்திரத்திற்காக அரசாங்கம் எப்போதும் நிற்கும் என்றும், மின்சாரத் துறையை எந்த நேரத்திலும் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்க அரசாங்கம் தேவையில்லை என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த மாதம் 26 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 2025 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க இலங்கை மின்சாரத் திருத்தச் சட்டமூலத்தின் மூலம், மின்சார சபையை மறுசீரமைத்து, முழுமையாக அரசுக்குச் சொந்தமான நான்கு நிறுவனங்களை நிறுவப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்ட விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
வேலைநிறுத்தப் போராட்டம்
இதன்படி தேசிய அமைப்பு நிறுவனம், தேசிய பரிமாற்ற வலையமைப்பு சேவைகள் நிறுவனம், இலங்கை மின்சார விநியோக நிறுவனம் மற்றும் இலங்கை மின் உற்பத்தி நிறுவனம் என கூறப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கை மின்சாரத் திருத்தச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட நான்கு நிறுவனங்களுக்கான ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இத்தகைய பின்னணியில், மின்சார தொழிற்சங்கங்கள் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்கியுள்ளன. மற்றும் அனைத்து கொள்முதல் நடவடிக்கைகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில் மின்சார சபை ஊழியர்களில் ஒரு பகுதியினர் இந்த நிறுவனங்களில் சேர விருப்பம் தெரிவித்து கடிதங்களை சமர்ப்பித்துள்ளதாக எரிசக்தி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், மின்சாரம் வழங்கல் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் ஒரு வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்டிருந்தார்.
இதை மின்சாரசபையின் ஊழியர்கள் குழு அசாதாரணமானது என கருதியிருந்தது. அத்தோடு, அனைத்து மின்சார ஊழியர்களின் விடுமுறையையும் இரத்து செய்ய நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
மறுசீரமைப்பு
புதிய மறுசீரமைப்பு மூலம் மின்சார சபைக்குள் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில், கோட்டை தொடருந்து நிலையம் முன்பாக இன்று பிற்பகல் இலங்கை மின்சார ஊழியர் சங்கம் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துள்ளது.
எவ்வாறாயினும், நாட்டின் எரிசக்தி சுதந்திரத்திற்காக அரசாங்கம் எப்போதும் நிற்கும் என்றும், மின்சாரத் துறையை எந்த நேரத்திலும் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்க அரசாங்கம் தேவையில்லை என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
அப்போது, எந்தவொரு நிறுவனமும் அல்லது கட்டமைப்பும் ஒரு உயர்ந்த வரலாற்று நிறுவனமாக இல்லை என்பதை மின்சார ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மின்சாரத் துறையில் புதிய சீர்திருத்தங்கள் குறித்த முன்னேற்ற மதிப்பாய்வு கலந்துரையாடலில் ஜனாதிபதி செயலகத்தில் பங்கேற்றபோது குறித்த விடயத்தை விளக்கியுள்ளார்.
எவ்வாறாயினும், தற்போதைய பதவிகள் அல்லது சம்பள அளவைக் குறைக்காமல் இருப்பது மற்றும் முன்னேற்றத்திற்கான தடைகளை நீக்குதல், அனைத்து ஊழியர் உரிமைகளையும் பாதுகாத்தல், புதிய நிறுவன கட்டமைப்பில் இலங்கை மின்சார வாரியமாக அனைத்து உரிமைகளையும் உறுதி செய்தல், எரிசக்தி இறையாண்மையைப் பாதுகாத்தல் மற்றும் அதை முழுமையாக அரசுக்குச் சொந்தமான நிறுவனமாக மாற்றுதல் ஆகிய கொள்கைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



