மட்டக்களப்பு-புதுக்குடியிருப்பு இனப்படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவு தினம்
தீய செயல்களால் எப்போதும் கெடுதல்தான் ஏற்படும். அதனால் நெருப்பைவிட தீய செயல்கள் தீங்கானது. அதாவது நெருப்பு மேலும் நெருப்பை உண்டாக்க வல்லது என பொருள்படுகின்றது.
மேற்படி குறளினூடாக திருவள்ளுவப் பெருந்தகை கூறியிருப்பது போன்று எவரொருவர் தீய செயற்பாடுகனில் ஈடுபடுகின்றாரோ மீண்டும் அவருக்கு அத்தீமை வந்தடையும் எனலாம்.
எனினும் கடந்த யுத்தகாலத்திலிருந்து தமிழினம் வடக்கு கிழக்கில் மிகவும் விலைமதிப்பற்ற அப்பவி மக்களை சுட்டும், கூரிய ஆயுதங்கள் கொண்டு தாக்கியும் கொன்றழித்த சம்பவங்களை வெறுமனே மறந்துவிட முடியாது. இவ்வாறு மட்டக்களப்புத் தமிழகத்தில் அமைந்துள்ள பல தமிழ் கிராமங்களில் இவ்வாறு கடந்த காலங்கள் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன.
இனப்படுகொலை
இந்நிலையில் செப்டம்பர் 21ஆம் திகதி மடக்களப்பு புதுக்குடியிருப்பு இனப்படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவு தினமாகும். இத்தினத்தில் குறித்த படுகொலைக் களத்திலிருந்து தெய்வாதீனமாக உயிர் பிழைத்தவரின் குரலோடு இக்கட்டுரை புலனாகிறது.
கண்களும்,கைகளும் கட்டப்பட்ட நிலையில் கடற்கரைக்கு அண்மையில் இருந்த குழிக்குள் படுகொலை செய்யப்படுவதற்காக காத்திருந்தோம். நான் அன்று தப்பியோட முயற்சித்திருக்கா விட்டால் எமது ஊரையே அழித்திருப்பார்கள் முஸ்லிம் ஊர்காவல் படையினர்.
குறித்த படுகொலையில் இருந்து உயிர் தப்பியவரின் நெஞ்சை உருக்கும் வார்த்தைகளே அவை. அன்று 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதியாகும். எனக்கு அப்போது 25 வயது மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு கிராமம்தான் எனது வசிப்பிடம் நான் அப்போது திருமணம் செய்யவில்லை. அம்மா, அப்பா மற்றும் சகோதர சகோதரிகளுடன் வசித்து வந்தேன்.
க.பொ.த உயர்தரம் வரையும் படித்து விட்டு அரச வேலைக்காக காத்துக்கொண்டிருந்த காலம் அது. வழமைபோல் நான் எனது வீட்டில் (மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதிக்கு அருகில்) இரவு உணவை முடித்துவிட்டு எனது அம்மாவினுடைய அக்காவின் (பெரியம்மா) வீட்டுக்கு (கடற்கரைக்கு அண்மித்த இடம்) இரவு உறக்கத்திற்காகச் செல்வது வழக்கம்.
அதுபோலவே அன்றைய தினமும் நான் செயற்பட்டேன். அப்போது நேரம் இரவு சுமார் 8.00 மணியிருக்கும் பின்பு பிபிசி தமிழோசை கேட்டுவிட்டு 9.20 மணியளவில் உறங்குவதற்காகச் சென்றபோது எங்களது கதவை யாரோ தட்டி தமிழில் அழைப்பதைக் கேட்டபோது கதவைத் திறந்து பார்த்தேன்.
முத்துலிங்கம் என்பவர் எனது பெரியப்பாவின் பெயரை (கதிரண்ணன்) என சொல்லி அழைத்தார் இராணுவத்தினர் சுற்றி வழைத்துள்ளதாகவும் விசாரணை செய்யப் போவதாகவும் பயப்படாமல் எல்லோரும் வரும்படியும் அவர் சொன்னார். அவருக்கருகில் இராணுவ உடை தரித்து ஆயுதங்களுடன் 4 பேர் நின்றார்கள்.(இராணுவ உடை அணிந்த முஸ்லிம் ஊர்காவல் படைவீரர்கள்;)
விசாரணை
முத்துலிங்கம் என்பவருக்கு மூன்று மொழியும் தெரியும் இதனால் இவரைக் கொண்டே மற்றவர்களை வீடு வீடாகச் சென்று அழைத்தனர்.அப்போது என்னையும் எனது பெரியம்மா பெரியப்பா மற்றும் எனது சகோதரிகளையும் அழைத்துக் கொண்டு வீதிக்கு வந்தார்கள்.
அப்போது 40 இற்கு மேற்பட்டோர் வீதியில் வரிசையாக நின்பதைக் கண்டேன் எங்களையும் அவர்களுடன் நிற்கச் சொன்னார்கள். அனைவரையும் கடற்கரை நோக்கி அழைத்துச் சென்றார்கள். எனக்கு என்னவோ சந்தேகமாகத்தான் இருந்தது ஏதோ விபரிதம் நடக்கப் போகின்றது என நான் மனதிற்குள் எண்ணிக் கொண்டேன்.
கடற்கரைக்கு அண்மையில் இருந்த ஒரு பெரிய குளிக்குள் எல்லோரையும் அமர வைத்துவிட்டு எனது பெரியப்பாவையும் மூன்று மொழிகளும் தெரிந்த முத்துலிங்கம் என்பவரையும் முதலில் அழைத்துக் கொண்டு கடற்கரைக்கு சென்றார்கள் அப்போது நின்ற ஒரு ஆயுததாரி (இராணுவ உடை அணிந்த முஸ்லிம் ஊர்காவல் படைவீரர்) ஏதோ சிங்களத்தில் சொல்ல அதற்கு முத்துலிங்கம் என்பவர் “இப்போது இருவர் இருவராக விசாரணைக்கென்று பெரியவர் அழைக்கின்றார்.
நாங்கள் முதலில் போகின்றோம்.அவர் விசாரிக்கின்றபோது சில நேரம் தடியால் அடிப்பார் இதனால் யாரும் அழுதால் நீங்கள் பயப்படத் தேவையில்லை” என சொல்லிவிட்டு போனார்கள். ஆனால் திரும்பிவரவில்லை ஆனால் அழுகுரல் கேட்டது பின்பு இன்னும் இருவர் சென்றார்கள். அவர்களும் வரவில்லை.அழுகுரல்தான் கேட்கின்றது. அப்போது எனக்கு சந்தேகம் உறுதியாகிவிட்டது.
நான் பின்னுக்கு பின்னுக்கு சென்றேன் 10 பேருக்கு மேல் சென்றுவிட்டார்கள் அடுத்ததாக மிகவும் உறுதியான பலமுள்ளவர்கள் இருவர் (நல்லையா, கோவிந்தன்) ஆகியோர் சென்றார்கள் அதில் கோவிந்தன் என்பவர் தப்பி ஓடுவதற்கு எத்தனிக்க அவரை துரத்திக் கொண்டு நீண்ட நேரமாக கொல்லுவதற்காக முயற்சிப்பதும் நல்லையா என்பவர் அவர்களுடன் சண்டைபோட்டு தப்பிக்க எத்தனிக்கவும் அதிக நேரமாக அடுத்த இருவரை அழைப்பதற்கு அவர்கள் வரவில்லை.
அப்போது நான் எப்படியாவது ஓட வேண்டும் என முடிவெடுத்தேன். ஆனால் பின்பு வந்தவர்கள் பெண்களின் சாறிகளை கிழித்தும் எங்களது சேட்களை களற்றியும் எமது கண்ணையும் இரு கைகளையும் பின்புறமாகக் கட்டிவிட்டு இன்னும் இருவரை அழைத்துச் சென்றார்கள் அடுத்ததாக எனது முறை நானும் எனது மைத்துணர் முறையான ஒருவரும் செல்ல வேண்டும்.
அப்போது நான் அவரின் முதுகில் உரைசி எனது கண்ணை களட்டினேன் பின்பு கையையும் ஒருமாதிரி களட்டிவிட்டு எனக்கு முன்னால் நின்ற ஆயுததாரியை (இராணுவ உடை அணிந்த முஸ்லிம் ஊர்காவல் படைவீரர்) வேகமாக உதைத்து தள்ளிவிட்டு ஓடினேன்.
முஸ்லிம் ஊர்காவல் படையினர்
சிறிது நேரத்தில் அடம்பன் கொடியில் தடுக்கி விழுந்தேன். என்னை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்கள், நான் விழுந்ததால் எனக்கு படவில்லை என்னுடன் நின்ற எனது மைத்துணரும் மற்ற திசையில் ஓடினார். பின்பு நான் ஒரு மணிநேரமாக திசை தெரியாமல் ஒடித்திரிந்து ஊருக்குள் வந்து எனது வீட்டை அடைந்தேன். நான் ஓடியதால் பயமடைந்த அந்த ஊர்காவல் படையினர் பலரை அவசர அவசரமாக துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் வெட்டியும் விட்டு ஓடிவிட்டார்கள்.
இவர்களின் இந்த இனவெறிச் செயலினால் அன்றய தினமே 17பேர் படுகொலை செய்யப்பட்டும் 10இற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையிலும் மறுநாள் இருந்ததைக் கண்டோம். நான் தப்பிக்காமல் இருந்திருந்தால் அழைத்துச் செல்லப்பட்ட 45 பேரும் முதற்கட்டமாக படுகொலை செய்யப்பட்டு அடுத்த கட்டமாக இன்னும் ஊருக்குள் வந்து அடுத்தடுத்த கட்டங்களாக படுகொலை செய்திருப்பார்கள் அந்த முஸ்லிம் ஊர்காவல் படையினர்.
அன்று நடந்தேறிய அந்த கொடுரமான படுகொலைச் சம்பவத்தினை நினைத்தால் இப்போதும் எனது நெஞ்சு காய்கின்றதென கூறினார் குறித்த படுகொலையில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பிய மட்டக்களப்பு புதுக்குடியிருப்பைச் பேரின்பராசா என்பவர். ஏனெனில் இதில் படுகொலை செய்யப்பட்ட 12 வயதுடைய ஒரு சிறுவனை இந்த இராணுவ உடை அணிந்த முஸ்லிம் ஊர்காவல் படைவீரர்கள் சிறிய சிறிய துண்டாக அரிந்து படுகொலை செய்திருந்தார்கள்.
இந்தச் சிறுவன் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து வீரச்சாவடைந்த தனது அண்ணனின் எட்டாவது நாளுக்கு தனது வீட்டில் பொங்கல் படைத்து விட்டு அந்தப் பொங்கலை அவரின் உறவினருக்கு கொடுப்பதற்காக வீதியில் வந்தபோது இந்தக் கொலைகாரர்களின் பிடியில் சிக்கி இருந்தார் அப்போது அவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில்தான் இவ்வாறு ஈவு இரக்கமின்றி துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பபட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இச்சம்பவம் இடம்பெற்று மறுநாள் ஆரையம்பதிப் பிரதேசத்திற்கு பொறுப்பாக இருந்த இராணுவத் தளபதி புதுக்குடியிருப்பு கிராம மக்கள் அனைவரையும் ஒரு இடத்தில் அழைத்து சம்பவம் தனக்கும்மிக வேதனையைத் தருகின்றது. இதனை என்னாலும் சகித்துக் கொள்ள முடியாதுள்ளது. இப்படுகொலையால் அவர்களது உறவுகள் படும் வேதனைகளையும் வலிகளையும் நான் உணர்கின்றேன்.
தண்டனை
என்னால் எவ்வாறு ஆறுதல் சொல்வதெனவும் தெரியாதுள்ளது என கண்களில் நீர் ததும்ப தனது கவலையை வெளியிட்டிருந்ததாக மட்டு,புதுக்குடிருப்பைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான ஏரம்பமூர்த்தி கங்காதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு-புதுக்குடியிருப்பு படுகொலை இடம்பெற்று தற்போது 35 வருடங்கள் கழிந்தாலும் அதில் உயிர்களைப் பலிகொடுத்தவர்களில் உறவினர்கள் ஆறாத வடுக்களைச் சுமந்து கொண்டு படுகொலைக்கான நீதி இதுவரையில் கிடைக்கா நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள்.
கிழக்கில் இவ்வாறு புதுக்குடியிருப்பில் மாத்திரமின்றி பல்வேறுபட்ட படுகொலைகள் அப்போது கட்டவிழித்து விட்டிருந்த போதும் அவைகளுக்கான நீதியான விசாரணைகளோ, குற்றவாளிளுக்கு எதிராக தண்டனைகளோ இதுவரையில் நிலைநாட்டப்படாத நிலமையே இன்றும் காணப்படுவதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இவ்வாறானதொரு படுகொலைச் சம்பவம் நிகழாதிருக்கவும், 35 வருடங்கள் கழிந்த பின்னரும் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு படுகொலைச் சம்பவத்திற்குரிய நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படாமலிருப்பதுவும் வேதனையான விடயமே.
எனினும் இனிமேலாவது கொலையாளிகள் இனங்காணப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதையே அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Rusath அவரால் எழுதப்பட்டு, 22 September, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.



