ரஷ்யாவில் வட்ஸ்அப் செயலிக்கு பதிலாக நடைமுறையில் உள்ள புதிய செயலி
ரஷ்யாவில் வட்ஸ்அப் (WhatsApp) செயலி முழுமையாக முடக்கப்பட்டுள்ள நிலையில், பயனர்கள் அரசின் ஆதரவு பெற்ற 'மெக்ஸ்' (MAX) என்ற செயலியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவின் இணைய ஒழுங்குமுறை அமைப்பான ரோஸ்கோம்நாட்சர் (Roskomnadzor), மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப் செயலியை நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டு நடக்க மறுப்பதாகக் கூறி தடை செய்துள்ளது.
சுமார் 10 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட இந்தச் செயலி முடக்கப்பட்டதால், மக்கள் தங்கள் அன்றாடத் தொடர்புகளுக்கு பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். வட்ஸ்அப்பிற்கு மாற்றாக ரஷ்யா 'மெக்ஸ்' என்ற புதிய செயலியை முன்னிறுத்துகிறது.
முழுமையாக முடக்கம்
இது சீனாவின் 'வீ செட்' (WeChat) போன்ற செயலி ஆகும். இதில் குறுஞ்செய்தி அனுப்புவது மட்டுமின்றி, வங்கிச் சேவைகள், அரச ஆவணங்களைச் சமர்ப்பித்தல் மற்றும் கட்டணம் செலுத்துதல் போன்ற வசதிகளும் உள்ளன.

எவ்வாறாயினும், வட்ஸ்அப் பயன்படுத்தும் 'எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்' (End-to-end encryption) பாதுகாப்பு வசதி மெக்ஸ் செயலியில் இல்லை. மேலும், அரசாங்கம் கேட்டால் பயனர்களின் தகவல்களைப் பகிர்ந்து கொள்வோம் என்று மெக்ஸ் செயலி வெளிப்படையாகக் கூறியுள்ளது.
இது மக்களின் தனிப்பட்ட உரையாடல்களை அரசு உளவு பார்க்க வழிவகுக்கும் என்று மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கின்றன. ரஷ்ய வீரர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் டெலிகிராம் (Telegram) செயலியின் வேகத்தையும் அரசு குறைத்துள்ளது.
முன்னதாக சிக்னல் (Signal) மற்றும் ஆப்பிளின் ஃபேஸ்டைம் (FaceTime) ஆகியவையும் முடக்கப்பட்டன. 10 கோடி மக்களைப் பாதுகாப்பான தகவல் தொடர்பிலிருந்து துண்டிப்பது மிகவும் பின்தங்கிய நடவடிக்கை என்றும், மக்களை உளவு பார்க்கும் செயலியை நோக்கித் தள்ளவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மெட்டா நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
உக்ரைன் போருக்கு மத்தியில், தகவல்தொடர்புகள் மீது தனது முழுக் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த ரஷ்யா எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை, அந்நாட்டு மக்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என்று ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் போன்ற அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.