இந்தியப் பெருங்கடலுக்கு அருகில் அவதானிக்கப்பட்ட சீனாவின் விண்வெளி கண்காணிப்புக் கப்பல்
சீனாவின் விண்வெளி கண்காணிப்புக் கப்பலான யுவான் வாங் 5, இந்தியப் பெருங்கடலுக்கு அருகில் மீண்டும் அவதானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது இந்திய தரப்பில் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமைவிடம்
இந்தோனேசியாவிலிருந்து சுமார் 36 மணி நேரத்திற்கு முன்பு புறப்பட்டு, வங்காள விரிகுடாவை நோக்கிச் சென்ற பிறகு, சுமார் நேற்றுமுன்தினம் (20) இரவு 8:10 (சர்வதேச நேரம்) அளவில் இந்தக் கப்பல் 11.0288° நெட்டாங்கு 100.9873° அகலாங்கை கொண்ட அமைவிடத்தில் காணப்பட்டதாக இந்தியா மற்றும் பங்களாதேஷ் கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மூன்று ஆண்டுகளில், இரண்டாவது முறையாக இந்தக் கப்பல் இந்திய கடல் எல்லைக்கு அருகில் அவதானிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2022 ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் ஆட்சேபனைகளை மீறி, யுவான் வாங் 5 இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.
இராணுவ நகர்வுகளைக் கண்காணிக்கும் திறன்
இந்த கப்பல் செயற்கைக்கோள்கள், ஏவுகணைகள் மற்றும் பிற இராணுவ நகர்வுகளைக் கண்காணிக்கும் திறன் கொண்டது என்பதால் அது தொடர்பில் கவலையளிப்பதாக இந்தியா கூறுகிறது.
குறிப்பாக இந்தப் பகுதியில் அமெரிக்காவுடனான இந்தியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு வளர்ந்து வருவதால், பெய்ஜிங்கிற்கு மதிப்புமிக்க உளவுத்தகவல்களை இந்த கப்பல் வழங்கக்கூடிய திறன்கள் இருக்கலாம் எனவும் இந்திய தரப்பு சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



