வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதால் வாழ வழியின்றித் தவிக்கும் மக்கள்: ரிஷாத் எம்.பி. கவலை
நாளுக்கு நாள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதால் மக்கள் வாழ வழியின்றித் தவிக்கின்றனர் எனவும், அவர்களின் கஷ்டங்களைப் போக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போது இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், மின்சாரக் கட்டணம் இலங்கையில் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. தொடர்ந்தும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக அறிவித்துள்ளார்கள்.
பொருளாதாரத்தை மீட்டெடுத்தல்
இவ்வாறான அழுத்தங்களால் மக்கள் எப்படி வாழ்க்கை நடத்துவது என்று திண்டாடுகின்றனர்.
கடந்த ஆட்சியாளர்களின் தவறுகள், பிழையான வழிநடத்தல்கள் மற்றும் அநியாயங்களினாலேயே எமது நாடு இன்று குட்டிச்சுவராகி, அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. அவ்வாறானவர்களைச் சேர்த்துக்கொண்டே ஜனாதிபதி ஆட்சியை நடத்துகின்றார்.
அவர்களை பகைக்காமல் பாதுகாக்கும் நிலையை ஏற்படுத்தி ஜனாதிபதி பல தவறுகளை மேற்கொள்கின்றார்.
இது நாட்டுக்குச் செய்கின்ற பாரிய துரோகமாகும். பொருளாதாரத்தை மீட்டெடுக்க மக்கள் மீது வரிகளை சுமத்துகின்றனர்.
மக்களை பாதுகாப்பு
கடந்த கால ஆட்சியாளர்கள் மேற்கொண்ட தவறுகளால் ஏற்பட்ட நட்டத்தை மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முயற்சிப்பது பாரிய அநியாயமாகும்.
எனவே, மக்கள் மீது சுமைகளைச் சுமத்துவதை விடுத்து, கடந்த காலத்தில் ஆட்சி செய்தவர்களிடமிருந்து பெற வேண்டியதைப் பெற்று மக்களை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.