வெளிநாட்டில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ஆபத்தான நபர்! பொலிஸார் வெளியிட்ட குற்றப்பட்டியல்
இலங்கையில் பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் முக்கிய சந்தேகநபராக கருதப்படும், ‘ரன் மல்லி’ என அறியப்படும் சரித் சந்தகெலும் பல்கேரியாவில் கைது செய்யப்பட்டமையை இலங்கை பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
இன்டர்போல் (வெளிநாட்டு பொலிஸ்) சிவப்பு அறிவிப்புகள் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் தரவுத்தளங்களில் உள்ள தகவல்களின் அடிப்படையில் பல்கேரிய பாதுகாப்புப் படைகளால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை இன்டர்போல் உறுதிப்படுத்தியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு நாடு கடத்தும் பணிகள் தீவிரம்
இதன்படி, நாடு கடத்தல் சட்டத்தின் கீழ் இலங்கைக்கு நாடு கடத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அவர் நாடு கடத்தப்பட்டதை தொடர்ந்து, ‘ஐஸ்’ போதைப்பொருள் கடத்தல், பணச்சலவை மற்றும் பிற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் அவரது ஈடுபாடு குறித்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவும், குற்றப் புலனாய்வுத் துறையும் விரிவான விசாரணைகளை நடத்த உள்ளன.
விசாரணையில் சிக்கிய வழக்குகள்
சந்தேகநபர் மீதான ஒரு முக்கிய வழக்காக, நவம்பர் 2025-இல், இலங்கையின் தெற்கு கடலோரப் பகுதியான கிரிந்தா (Kirinda) கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின்போது, 30 கோடி ரூபாய்க்கு அதிகமான சுமார் 345 கிலோகிராம் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (Crystal Methamphetamine - 'ஐஸ்' போதைப்பொருள்) பறிமுதல் செய்யப்பட்டதாகும்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் துபாயில் வசித்து வந்த ரன் மல்லி, இந்த போதைப்பொருளின் உரிமையாளராக அடையாளம் காணப்பட்டார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு போதைப்பொருளைக் கொண்டு செல்ல பல சந்தேகநபர்களுக்கு அவர் அறிவுறுத்தியதாகவும், அவர்களுடனான தொடர்பிற்காக ஒவ்வொருவருக்கும் ரூ. 5 இலட்சம் கொடுத்ததாகவும் கூறப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக எட்டு சந்தேகநபர்களும் ஆறு வாகனங்களும் கைது செய்யப்பட்டதோடு, மேலதிக விசாரணைகளுக்காக நீதவான் நீதிமன்றம் அவர்களுக்கு ஏழு நாள் தடுப்புக் காவல் உத்தரவுகளையும் வழங்கியது.
2021 ஜூலையில் கொட்டாவ பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் ரூ. 13.9 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணம் தொடர்பான ஒரு பெரிய பணச்சலவை விசாரணையிலும் இவர் முக்கிய சந்தேகநபராக உள்ளார்.
இதனையடுத்து பன்னிப்பிட்டியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த பணம் கண்டெடுக்கப்பட்டது.
மோசடிகளுக்கு மூளையாக செயற்பட்டவர் நபர்
இலங்கையில் தனது நிதி விவகாரங்களை கண்காணிக்க அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்த அவரது மருமகன் தினேஷ் லக்மால் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டார்.

2022-ஆம் ஆண்டில் ஹம்பாந்தோட்டாவில் உள்ள மகா ராவண கோட்டைக்கு அருகே கடலில் 331 கிலோகிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு பெரிய அளவிலான கடல்வழி போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையிலும் இவர் ஈடுபட்டிருந்தமை புலனாய்வு அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன.
இலங்கை கடற்படை, பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை (STF) மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஆகியவை இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் இந்த போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கையின் மூளையாக செயற்பட்டவர் சந்தகெலும் ( ரன் மல்லி) என புலனாய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri