முகப்புத்தக பதிவை அடுத்தவர்களுக்கு பகிர்வது குறித்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
நுவான் சண்டகெலும் என்ற பெயரில் முகப்புத்தக கணக்கு வழியாக பரப்பப்படும் சிறுவர்களின் படங்களைக் கொண்ட சமூக ஊடகப் பதிவுகளை அடுத்தவருக்கு பகிர்வதைத் தவிர்க்குமாறு பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சகம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
இந்தப் படங்களைத் தொடர்ந்து பகிரும் செயற்பாடானது, சம்பந்தப்பட்ட சிறுவர்களின் அடையாளம், தனியுரிமை மற்றும் நல்வாழ்வுக்கு தீங்கு விளைவிக்கும் என்று அமைச்சகம் எச்சரித்துள்ளது.
பிள்ளைகளின் படங்கள்
குறித்த முகப்புத்தக பதிவில், அந்த நபரின் மனைவி அவரையும் அவர்களது பிள்ளைகளையும் விட்டுச் சென்றுவிட்டதாகவும், அவர் தனது இரண்டு குழந்தைகளைப் பராமரிக்க சிரமப்படுவதாகவும், தனது சொந்த வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்கு முன்னர், பிள்ளைகளை அழைத்துச் செல்ல விரும்பும் எவருக்கும் அவர்களை கையளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் இலங்கை பொலிஸ் ஏற்கனவே தலையிட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறித்த குடும்பத்தின் திருமணப் பிரச்சினை தொடர்பான நீதிமன்ற வழக்கு தற்போது நடந்து வருகிறது.
அத்துடன் பிள்ளைகளின் தற்காலிக பாதுகாப்பு, நன்னடத்தை அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் அவர்களின் பாட்டியிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின் முடிவைப் பொறுத்து, தேவைப்பட்டால் மேலும் தலையீடு செய்யப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
