அமைச்சர்களின் வீடுகளுக்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள்
முன்னாள் அமைச்சர் மருத்துவர் ரமேஷ் பத்திரனவின் இல்லத்திற்கு எதிரில் இன்று பிற்பகல் மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசாங்கம் மற்றும் முன்னாள் அமைச்சருக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய ஆர்ப்பாட்டகாரர்கள், “ஜனாதிபதி உடனடியாக வீட்டுக்கு செல்ல வேண்டும்” எனவும் கோஷம் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக காலி கித்துலம்பிட்டிய வீதியில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முன்னாள் அமைச்சரின் வீட்டின் நுழையில் பூட்டு போட்டு மூடப்பட்டிருந்ததுடன் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டகாரர்கள் முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரனவின் வீட்டிற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்த வந்துக்கொண்டிருந்த போது இடையில் ராஜாங்க அமைச்சர் மொஹான் பி. டி சில்வாவின் வீட்டுக்கு எதிரிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதேவேளை மாத்தறையில் உள்ள மீன்பிடி ராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் வீட்டுக்கு எதிரிலும் பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் ஜனாதிபதி உட்பட அரசாங்கம் உடனடியாக பதவி விலகி வீட்டுக்கு செல்ல வேண்டும் என கோஷமிட்டனர்.



