ஜனாதிபதி தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவு குறித்து வெளியாகவுள்ள அறிவிப்பு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக இறுதி முடிவை எதிர்வரும் 14 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக அறிவிக்க உள்ளதாக கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் (Risad Badhiutheen) தெரிவித்துள்ளார்.
மன்னார் (Mannar) மாவட்ட ஆதரவாளர்களுடன் நேற்றைய தினம் (10) இடம்பெற்ற சந்திப்பின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற ஓர் கட்சி. நாட்டில் பத்து மாவட்டங்களில் நாடாளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் கடந்த காலங்களில் போட்டியிட்டுள்ளது.
மக்களின் கருத்து கணிப்பு
அதன் அடிப்படையில் இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து மன்னார் மாவட்டத்தில் உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களுடன் கலந்துரையாடும் வகையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
மன்னார் உட்பட மேலும் பல மாவட்டங்களில் மக்கள் சந்திப்பை மேற்கொண்டு மக்களின் கருத்துக் கணிப்பை பெற்றுக் கொள்ள உள்ளோம். கடந்த 06 ஆம் திகதி எமது கட்சியின் உயர்பீடம் கூட்டப்பட்ட போது கட்சிக்குள் இரு வகையான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.
எனவே, கட்சியினுடைய உறுப்பினர்களுக்கு மதிப்பளித்து அவர்களின் கருத்துக்களை உள் வாங்கி அக்கருத்துக்களின் அடிப்படையில் இரண்டு வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பலர் இருந்தமையினால் எதிர்வரும் 14 ஆம் திகதி எமது முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளோம்.
கடந்த காலங்களில் சஜித்தின் கூட்டமைப்புடன் இருந்தமையினால் எதிர்க்கட்சி அரசியலை நான்கு வருடங்களாக முன்னெடுத்தோம். இந்த நிலையில் நாட்டினுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கும் புதிய தேர்தல் இடம்பெற உள்ளமையினால் கட்சி கூடி ஒரு முடிவை எடுக்கின்றமையினால் எமது முடிவை அறிவிக்காமல் இருக்கின்றோம்.
கட்சியின் உயர்பீட ஆலோசனையின் படி மாவட்டம் தோறும் சென்று நிர்வாக உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடி வருகிறோம். இந்த கலந்துரையாடலில் கட்சியின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இறுதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கட்சியும் 14 ஆம் திகதி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு, முழு மூச்சாக குறித்த வேட்பாளரை வெற்றி பெற செய்வதாக வாக்குறுதி வழங்கியுள்ளனர்.
அந்த வகையில் எதிர்வரும் 14 ஆம் திகதி எமது கட்சி ஆதரவு வழங்க உள்ள ஜனாதிபதி வேட்பாளர் யார்? என்பதை அறிவிப்போம். அந்த வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய நாங்கள் நாடு முழுவதும் இரவு பகலாக சென்று அவரை வெற்றி பெற செய்வதற்காக பாடுபடுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |