புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரின் பொறுப்பற்ற செயல்: விசனப்படும் பொதுமக்கள்(Photos)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் குப்பை சேகரிப்பு உழவியந்திரத்தில் குப்பைகளிடையே மனிதரை ஏற்றிச் செல்லும் மனித நேயமற்ற செயலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இந்த அசௌகரியமான செயல் 09.10.2023 அன்று காலை 09:58 மணிக்கு புதுக்குடியிருப்பு - பரந்தன் வீதியில் (A35) தேராவில் குளத்திற்கு அண்மையில் தேக்கம் காட்டுவழித்தடத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், குப்பைகளோடு பணியாளரொருவரையும் ஏற்றிச் சென்றது அதிர்ச்சியளித்ததாக மக்கள் கருத்துரைத்துள்ளனர்.
சர்வதேச மனிதாபிமான சட்டங்களை காற்றில் பறக்க விட்ட இஸ்ரேல்! காசா முற்றுகைக்கு எதிராக திரண்ட 21 நாடுகள்
அருவருக்கத்தக்க செயல்
குப்பை சேகரிப்பு உழவியந்திரம் மூங்கிலாற்றில் இருந்து தேராவில் நோக்கிய திசையில் பயணித்துக் கொண்டிருந்தது.
(இணைக்கப்பட்ட புகைப்படம் மூங்கிலாறு - தேராவில் இடையே எடுக்கப்பட்டது.)
இதன்போது குப்பைகளை மூடாது ஏற்றிச் சென்றுள்ளனர். மேலும் அது வளிக்கு திறந்து விடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்துள்ளது.
கடுமையான துர்நாற்றம் வீசியதோடு குப்பைகள் காட்சித் தோற்றத்தில் அருவருக்கத்தக்கதாக இருந்ததையும் அவதானித்ததோடு அதனுள் ஒரு மனிதர் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக அந்த வாகனத்தின் பின்னாக பயணித்த பலர் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த உயர்தர மாணவர்கள் சிலர் கருத்துத் தெரிவிக்கும் போது, “எவ்வாறாயினும் அவரும் ஒரு தொழிலாளர். அவருக்குரிய மரியாதையை கொடுத்திருக்க வேண்டும்” என கவலை தொனிக்க தமது கருத்தை முன்வைத்திருந்தனர்.
எனினும், செய்வன திருந்தச் செய் என்பது போல குப்பைகளை ஏற்றிச் செல்லும் போதும் அந்த குப்பைகளை வீதியின் வழியே கொண்டு செல்லும் போதும் மூடு திரையொன்றின் உதவியோடு மூடியபடி கொண்டு செல்வதே பொருத்தமான, நாகரீகமான செயற்பாடாக அமையும் எனவும், அதனுள் மனிதர்களை இருந்து பயணிக்க விடுதல் பொருத்தமற்றதாகவிருக்கும் எனவும் சுகாதார பரிசோதகரொருவர் இது தொடர்பில் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
பிரதேச சபையினரின் செயற்பாடு
இனிவரும் காலங்களில் இது போன்றதொரு செயற்பாடு இடம்பெறாத வகையில் நடவடிக்கை எடுக்க தான் அறிவுறுத்துவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் உரையாடுவதற்காக புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரைத் தொடர்புகொள்ள எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்துந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரின் செயற்பாடுகள் போலவே முள்ளிவளை பிரதேச சபையினரும் முல்லைத்தீவு பிரதேச சபையினரும் குப்பைகளை மூடாதே வீதியின் வழியே கொண்டு செல்லப்படுவது பல தடவை அவதானிக்கப்படுள்ளது.
உரிய முறையில் சுட்டிக்காட்டிய போதும் இதுவரை எத்தகைய மாற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதை முள்ளியவளை மற்றும் தண்ணீரூற்று, புதுக்குடியிருப்பு பிரதேசசபையினரின் குப்பைகளை சுத்திகரிக்கும் செயற்பாடுகள் பற்றி மக்கள் சில குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்துள்ளனர்.
மணல் மற்றும் கருங்கற்களை ஏற்றிச்செல்லும் டிப்பர் ரக வாகனங்களில் அவற்றை மூடிக்கொண்டு செல்லும் இயல்பு இங்கே இருப்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும்.
விசனப்பட்டுக் கொண்ட பொதுமக்கள்
குப்பைகளை கொண்டு செல்லும் போது அதனை வீதியால் பயணிப்போர் பார்க்காதவாறு மறைப்பிட்டு கொண்டு செல்வதில் இலகுவான முறைகளை கையாள முடியும் எனவும், அவை பற்றி ஏன் பிரதேச சபையினர் சிந்திக்கவில்லை என்றும், தனி மனித சுய உணர்வுகளையும் அவர்கள் சார்ந்தோரின் மன உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பதே இனிமையானதோர் நல்வாழ்வுக்கு நம்மை இட்டுச்செல்லும் என்றும் கவிஞர் நதுநசி, இது தொடர்பான உரையாடலில் குறிப்பிட்டமையும் நோக்கத்தக்கது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரின் குப்பைகளை சேகரிக்கும் உழவியந்திரத்தில் குப்பைகளின் இடையே மனிதரொருவரை ஏற்றியவாறு பயனிக்கின்றனர்.
குப்பை சேகரிப்பு வண்டியின் பின்னாக கூட பயணிக்க முடியாதளவுக்கு துர்நாற்றம் வீசுகின்றமையும், காட்சித் தோற்றத்தில் அருவருக்கத்தக்கதாகவும் உள்ள போது அதனுள்ளே எப்படி மனிதரொருவரை ஏற்றிச் செல்ல முடிகின்றது என்று பொதுமக்கள் விசனப்பட்டுக் கொண்டமை இங்கு நோக்கத்தக்கது.
அழுக்குகள் அகற்றப்படும் போது உச்சளவு மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற உயரிய பண்பாடு புதுக்குடியிருப்பு பிரதேச சபையினருக்கு இல்லையா? என்ற கேள்வியை மக்களில் பலர் எழுப்புகின்றனர்.
இவற்றுக்கெல்லாம் மாற்றங்கள் நன்றே நடந்து விட்டால் நலம் நின்று நன்மை தரும் என்பது உண்மை என்பதே எமது நெடுநாள் கருத்தாக அமைகிறது.
[X6SFNTU ]