மலையக தமிழ் தலைவர்கள் இம்முறை எப்படி களம் காண்கிறார்கள்...!
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மலையக தமிழ் மக்களின் பிரதிநிதியாக சுயேச்சையாகப் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர், பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கை அடிப்படையாகக் கொண்ட தமிழ் அரசியல் கூட்டணியில் போட்டியிடத் தீர்மானித்துள்ளார்.
தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி தலைமையிலான ஐக்கிய கூட்டணியில் மயில்வாகனம் திலகராஜ் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி அறிவித்திருந்தார்.
கடந்த பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாசவ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பதுளை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய வடிவேல் சுரேஷ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியில் இணைந்தார். இம்முறை அதே கட்சியில் இருந்து பதுளை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கும் வேட்பாளர்கள்
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பெரியசாமி சந்திரசேகரனின் புதல்வியான சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் நுவரெலியா மாவட்டத்தில் ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சி சார்பில் போட்டியிடுகின்றார்.
மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியும், பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய (சங்கம்) முன்னணியும், வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணியும் இணைந்து உருவாக்கியுள்ள, தமிழ் முற்போக்கு கூட்டணி, பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து ஐக்கிய மக்கள் கூட்டணியின் கீழ் போட்டியிடுகிறது.
மலையகத் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் சஜித் பிரேமதாச தலைமையில் தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடவுள்ளது.
பிரதான எரிவாயு சிலிண்டர் சின்னம்
ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்திலும், பதுளை மாவட்டத்தில் சிலிண்டர் சின்னத்திலும் போட்டியிடவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் பிரதானமாக எரிவாயு சிலிண்டர் சின்னத்திலும் ஒரு சில மாவட்டங்களில் யானை சின்னத்திலும் போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் துணைத் தலைவராக இருந்த பாரத் அருள்சாமி, ஒக்டோபர் 7ஆம் திகதி கட்சி உறுப்புரிமை மற்றும் உபதலைவர் பதவியை இராஜினாமா செய்து, ஒக்டோபர் 8ஆம் திகதி மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியில் இணைந்தார்.
இதற்கமைய, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியில் கண்டி மாவட்டத்தில் பாரத் அருள்சாமி போட்டியிடுகிறார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |