கறுப்பு ஜூலை வன்முறை குறித்து ஆராய நாடாளுமன்றத் தெரிவுக்குழு
1983ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அவற்றின் தாக்கங்கள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது என்று சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்கள்
1983ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் தாக்கங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து, அது தொடர்பான முழுமையான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது இந்தக் குழுவின் முக்கியப் பொறுப்பாகும்.

அத்துடன், தேசிய நல்லிணக்கத்தையும் இனங்களுக்கிடையிலான சகவாழ்வையும் வலுப்படுத்துவதற்கான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதுடன், அக்கால வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளையும் ஆராயவுள்ளது.
அரசு மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் விவரம் வருமாறு:-
01. அமைச்சர் சரோஜா போல் ராஜ் – தலைவர்
02. அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
03. பிரதி அமைச்சர் எரங்க குணசேகர
04. பிரதி அமைச்சர் முனீர் முலாபர்
05. நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்
06. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்
07. நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன்
08. நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி
09. நாடாளுமன்ற உறுப்பினர் தனுர திஸாநாயக்க
10. நாடாளுமன்ற உறுப்பினர் சேன நாணயக்கார
11. நாடாளுமன்ற உறுப்பினர் சுரங்க ரத்நாயக்க
12. நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணி விஜேசிங்க
இலங்கையின் நீண்டகால உள்நாட்டுப் போருக்கு முக்கியக் காரணிகளில் ஒன்றாக இந்தச் சம்பவங்கள் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.