சிறையிலிருந்து வந்த நாமல்! நாடாளுமன்றத்தில் பேசிய விடயம்
அரசியல் பழிவாங்கல்கள் மூலம் தங்களை முடக்க முடியாது என்றும், சட்டத்தின் முன் தங்களது நியாயத்தை நிரூபிப்போம் என்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ச விளக்கப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றையதினம்(8.9.2026), நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காகச் சிறைச்சாலை அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டதையடுத்து அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சிறையில் இருக்கும் கைதிகளின் மனித உரிமைகள், அடிப்படை வசதிகள் மற்றும் சிறைச்சாலை அமைப்பில் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்துப் பேசிய அவர், சுதந்திரம் மட்டுமே பறிக்கப்பட வேண்டுமே தவிர, மனித கண்ணியம் பாதிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தினார்.
பொருளாதாரக் கொள்கைகள்
தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நிர்வாக ரீதியிலான தோல்விகளை விமர்சித்து, மக்கள் நலனுக்கான திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும் எனக் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. எல் நினோ காலநிலைத் தாக்கத்தால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், விவசாயிகளுக்கு முன்கூட்டியே வழங்கப்பட வேண்டிய நிவாரணங்களையும் உதவிகளையும் இந்த அரசு வழங்கத் தவறிவிட்டது.
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. ஆனால், அவை நிறைவேற்றப்பட்டனவா என்பது தெரியவில்லை. அதேபோல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு நிதி உதவி வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அது வழங்கப்பட்டதா என்றும் தெரியவில்லை.
உரிய நடவடிக்கை
எனவே, தயவுசெய்து நேபாளத்தை ஏமாற்றிவிட வேண்டாம். இது சர்வதேச மட்டத்தில் நமது நாட்டுக்கு நல்லதல்ல. சுகாதாரத்துறையை மேம்படுத்துவோம் என ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தேசிய மக்கள் சக்தி அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால், இன்று வைத்தியசாலைகளில் மருந்துகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்றது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முறையான தலையீடுகளை அரசு மேற்கொள்ளவில்லை. நிலைமை இவ்வாறு இருக்கையில், தற்போது வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டாம் எனக் கூறுகின்றனர். கிராமப்புற மக்கள் முழுமையாக அரச வைத்தியசாலைகளையே நம்பியுள்ளனர்.

எனவே, கொத்தமல்லி குடித்துவிட்டு வீட்டில் இருக்குமாறு கூறுவதற்கு ஜனாதிபதிக்கு எவ்வித உரிமையும் கிடையாது. டெங்கு நோயாளர்களும் கொத்தமல்லி குடித்துவிட்டுத் தூங்க முடியுமா.
கொத்தமல்லி குடிப்பதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், நோயாளிகளுக்கு வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெறும் அடிப்படை உரிமை இருக்க வேண்டும்.
கதைகளைக் கூறி இந்த நாட்டு மக்களை ஏமாற்றுவதை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் கட்டடங்களின் இரண்டாம் மாடிக்கு அடிக்கல் நாட்டுங்கள் அல்லது மலசலக்கூடத்துக்கு அடிக்கல் நாட்டுங்கள்.
ஆனால், முதற்கட்டமாகக் கொத்தமல்லி விலையைக் குறைக்கவும், வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல்-ராகேஷ்
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening